நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம் சென்ற மாதம் 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டது.


சந்திரயான் 3


தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்த நிலையில், சென்ற 16ஆம் தேதி அது நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டதுடன், விண்கலத்தின் லேண்டர் அமைப்பான விக்ரம் தனியே பிரிந்தது.


நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட்.23 நிலவின் மேற்பரப்பில் இந்த லேண்டர் தரையிரங்க உள்ளது. அதன் பிறகு லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


விக்ரம் லேண்டர் அனுப்பிய புகைப்படம்


முன்னதாக, விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்த பிறகு நிலவின் நெருக்கமான முதல் படங்களை பகிர்ந்தது.  இஸ்ரோ லேண்டர் இமேஜ் எல். ஐ கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த துல்லியமான படங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்திருந்தன.


இந்நிலையில்,  நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம் என கேலிச்சித்திரம் ஒன்றை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கார்ட்டூனால் களமாடும் நெட்டிசன்கள்


நபர் ஒருவர் சுற்றி வளைத்து டீ ஆற்றும் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ப்ரேக்கிங் செய்தி, விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்” என பாஜக அரசை கேலி செய்யும் வகையில் தன்  சமூக வலைதளப் பக்கத்தில் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார்.






இந்நிலையில், பிரகாஷ் ராஜின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் தற்போது எதிர்வினையாற்றி வருகின்றனர். “கண்மூடித்தனமான வெறுப்பு இவர்களை நாட்டின் சாதனைகளைக் கூட காண விடாமல் செய்கிறது” என்றும், “சந்திரயான் 3 இஸ்ரோவால் அனுப்பப்பட்டது பாஜகவால் அல்ல” என்றும் நெட்டிசன்கள் கடுமையாக பிரகாஷ் ராஜின் பதிவுக்கு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


“பாஜக அரசின் அவலங்களை அவர் தோலுரிப்பதை பொறுக்க முடியாமல் பலர் இருக்கிறார்கள்” எனவும் மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் பதில் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.


பிரகாஷ் ராஜ் அரசியல் கருத்துகள்


நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்து கருத்துகளை முன்வைத்து வருகிறார். 


மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கர்நாடகாவில் பிரகாஷ் ராஜ் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிய பின், அந்தக் கல்லூரி ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த மாணவர்கள் சிலர் கோமியம் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தன் நண்பரும் பெண் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ். அதன் எதிரொலியாக கடந்த 2017ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்தார். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவின், பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட  பிரகாஷ் ராஜ் தோல்வியைத் தழுவினார். 


அதன் பின்னர் அரசியலைத் தவிர்த்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்,  தொடர்ந்து  பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியின்  செயல்பாடுகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.