கடவுள் என் முன்னால் வந்தால் நான் என்ன கேட்பேன் தெரியுமா என்ற கேள்வியோடு நடிகரும்,இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சிறப்பு தோற்றத்தில் விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து டிஷ்யூம், நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும், காதலில் விழுந்தேன், தநா-07 அல் 4777, வேட்டைக்காரன், வேலாயுதம், அங்காடித்தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இணைந்தார். 






இதனைத் தொடர்ந்து நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான், சலீம், சைத்தான், எமன்,  அண்ணாத்துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தொடர்ந்து பிச்சைகாரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இவை இரண்டையும் தவிர்த்து பிற இசையமைப்பாளர்களின் இசையில் விஜய் ஆண்டனி பாடியும் வருகிறார். இதற்கிடையில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அடிக்கடி குரல் கொடுக்கும் அவர், சமீபத்தில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட கல்லூரி மாணவி சத்யஸ்ரீ மரணத்திற்கு குரல் கொடுத்தார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். 






இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள ட்வீட்டில், கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க? என கேட்டு பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் காமெடியாக கமெண்ட் செய்துள்ளனர்.