பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் நடிக்கும் படத்தில் பிரபல நடிகை பார்வதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் நடிக்கும் சியான் 61 இல் கமிட் ஆனார் பா.ரஞ்சித். தொடர்ந்து இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க விருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்டது. 


விக்ரம் நடிப்பில் வெளியான "கோப்ரா" திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக ஆதித்த கரிகாலனாக அவர் நடித்த  "பொன்னியின் செல்வன் 1" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில்  பா.ரஞ்சித்துடன் இணையும் படத்தின் லுக் டெஸ்ட் சென்னையில் நடந்து முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அந்தப்படத்தின்  ஷூட்டிங் தொடங்கியது. 


 






‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப்படமானது சுதந்திரத்திற்கு முந்தைய 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி வருகிறது. படத்தின் லொக்கேஷன்களுக்காக பா.ரஞ்சித்தும் அவரது குழுவும் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளனர். தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில், படத்தில் நடிகர் பசுபதியும் இணைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அவர் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்தப்படத்தில் இருந்து அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட் என்னவென்றால், இந்தப்படத்தில் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பார்வதி இணைந்து இருக்கிறார் என்பதுதான். 


முன்னதாக இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக கமிட் ஆகியிருந்த நிலையில் தேதிகள் ஒத்து வராத காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகை மாளவிகா மோகனன் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் வேறு சில கதாநாயகிகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பான் - இந்திய திரைப்படமாக உருவாக வரும் இந்தப்படம்  2டி மற்றும் 3டியில் உருவாக்கப்பட உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படம் 2023ல் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.