பிரபல இயக்குநரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


1986 ஆம் ஆண்டு பிரபு நடித்த  'அறுவடை நாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஜி.எம்.குமார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. ஆனால் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்களை நிராகரித்த ஜி.எம்.குமார் மோகன் நடித்த  'உருவம்' படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால் இப்படம் படுதோல்வி அடைந்ததால் தனது பாதையை நடிப்பு பக்கம் திருப்பினார். 


 






1992 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய  'கேப்டன் மகள்' படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்த ஜி.எம்.குமார், 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த  'வெயில்' திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். தொடர்ந்து  'குருவி',  'மச்சக்காரன்',  'மலைக்கோட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு 2009 ஆம் ஆண்டு வெளியான  'மாயாண்டி குடும்பத்தார்' படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்  'அவன் -இவன்',  'அசுரன்',  'கர்ணன்' போன்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வந்தார். இதில்  ‘அவன் இவன்’ நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.