தமிழ் சினிமாவின் அதிகம் கொண்டாடப்படா விட்டாலும், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களிடம் தனக்கென தனியிடம் பிடித்த ஹீரோ பிரசன்னா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


இமேஜ் வளையத்துக்குள் சிக்காத நடிகர் 


பொதுவாக சினிமாவில் நடித்தால் ஹீரோ, எந்த கேரக்டர் என்றாலும் தயார் என்ற இருவகையில் தான் பிரபலங்கள் இருப்பார்கள். இதில் இரண்டாம் வகையான நான் எந்தவித கேரக்டர் கொடுத்தாலும் சரி, என் திறமையை நிரூபித்தால் சரி, பரிசை ரசிகர்கள் கொடுப்பார்கள் என தைரியமாக சிலர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான் பிரசன்னா. அவரின் பயணம் ஹீரோவாக தொடங்கினாலும் வில்லன், துணை நடிகர் என அனைத்து வித ரோல்களிலும் உடலளவிலும் உள்ளத்தாலும் முழுமையாக மாறி அசத்தி விடுவார்.


பிரசன்னாவின் சினிமா எண்ட்ரி


திருச்சியைச் சேர்ந்தவரான பிரசன்னா பொறியியல் பட்டப்படிப்பு படித்த காலத்திலேயே அவருக்குள் நடிப்பதற்கான ஆர்வம் இருந்தது. மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய 'ஃபைவ் ஸ்டார்' படமானது ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட கதையாக இருந்தது. 5 பேரில் ஒருவராக பிரசன்னா அறிமுகமானாலும், அவர் தான் ஹீரோ என்பதை அழுத்தமாக சொல்லியது காட்சிகள். 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிரசன்னாவின் ஆரம்ப காலக்கட்டம் பெரிய அளவில் உயரவில்லை. 


2 ஆண்டுகள் கழித்தே 2004 ஆம் ஆண்டு அவர் நடித்த அழகிய தீயே படம் வெளியானது. இதில் ‘விழிகளின் அருகில் வானம்’ பாடலில் வரும் பிரசன்னாவை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. க்யூட்டான சாக்லேட் பாய் என சொல்லும் அளவுக்கு துருதுருவென இருப்பார். இதன் பின்னர் கண்ட நாள் முதல் படம் அவருக்கு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படியான நிலையில் மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இயக்கிய 'சீனா தானா 001' மற்றும் மறைந்த இயக்குநர்  சித்திக் இயக்கத்தில் வெளியான ‘சாது மிரண்டா’ என 2 படங்களிலும் காமெடி மற்றும் அப்பாவி வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பாரட்டைப் பெற்றார். 


வில்லனாக மாற்றம் கண்ட பிரசன்னா


இப்படி ஹீரோவாக அவரது கேரியர் சென்று கொண்டிருந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே படம் வெளியானது. இதில் வில்லனாக மாற்றம் கண்டார் பிரசன்னா. முன்னரே சொன்னது போல் இமேஜ் வளையத்துக்குள் சிக்காத அவரை வில்லனாகவும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். கொடூர வில்லனாக அதிகம் உணர்ச்சிவசப்படாமல் ஒவ்வொரு முறையும் சுயநலத்துடன் நடந்து கொள்ளும் பிரசன்னாவின் கேரக்டர் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 


மறுபக்கம் கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், முரண், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம், புலிவால், நேற்று இன்று என ஹீரோவாக தொடந்த அவர் நடிப்பில் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல தொடங்கினார். பாணா காத்தாடி படத்தில் ஹீரோ, வில்லன் கேரக்டரை தாண்டி கதையில் முக்கிய கதாபாத்திரம் என்றால் ரெடி என்பதை திரையுலகுக்கு உணர்த்தினார். 


இதனால் பவர் பாண்டி, நிபுணன், துப்பறிவாளன், மாஃபியா சாப்டர் 1, நாங்க ரொம்ப பிஸி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் அசத்தினார். இடையில் திருட்டுப்பயலே 2 படத்தில் மாடர்ன் வில்லனாக மிரட்டினார். தற்போது வெளியாகியுள்ள கிங் ஆஃப் கொத்தா படத்தில் முக்கிய கேரக்டரில் பிரசன்னா நடித்துள்ளார். 


குடும்ப வாழ்க்கை 


அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நடிகை சினேகாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நடிப்பு மட்டுமல்லாது டப்பிங் கலைஞர், டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பிரசன்னா ஒரு ரவுண்ட் வந்துள்ளார்.  அவர் வாழ்விலும், திரைத்துறையிலும் மென்மேலும் உயர இந்த பிறந்தநாளில் வாழ்த்துவோம்..!