இதுவரை ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்தப் படங்கள் மொத்தம் மூன்றுதான். ஒன்று மலையாளத்தின் வெளிவந்த கும்பலங்கி நைட்ஸ். இரண்டாவது படம் தெலுங்கில் வெளிவந்த புஷ்பா. மூன்றாவது படம் தமிழில் வெளிவந்த வேலைக்காரன் . தற்போது தனது கரீயரில் நான்காவது முறையாக தமிழ் சினிமாவில் இரண்டாவது முறையாக மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் ஃபஹத்.
ஃபஹத் ஃபாசில்
ஒரு சிறந்த நடிகனாக இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஃபஹத் மாமன்னன் திரைப்படத்தில் எப்படியான வில்லனாக இருப்பார் என்கிற ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கிறது. முந்தைய மூன்று படங்களில் வில்லனாக நடித்த பஹத்தின் கதாபாத்திரங்களை ஒரு முறை பார்க்கலாம்.
வேலைகாரன்
ஃபஹத் ஃபாசில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வெளியானபோது இருந்த ஆர்ப்பாட்டம் அந்த படத்தைப் பார்த்த பின்பு மறைந்துவிட்டது. தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி மாதிரியான ஒரு கதாபாத்திர வடிவமைப்பை அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் எதிர்பார்த்து வந்த நிலையில், ஒரு பிஸ்னஸ்மேனின் சூழ்ச்சி மட்டுமே அவரது கதாபாத்திரத்தில் இருந்தது. அதை தவிர்த்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் அவருக்கு அந்தப் படத்தில் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கும்பலங்கி நைட்ஸ்
மலையாளத்தில் வெளிவந்த கும்பலங்கி நைட்ஸ் திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஃபஹத். இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரமே உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளான ஒருவரைப்போல் இருந்ததால் நேரடியாக ஒரு வில்லனாக இல்லாமல் மனநலம் பாதிப்படைந்த ஒருவனின் கெட்ட குணமாக மட்டுமே அந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.
புஷ்பா
நம் அனைவரது மனதும் எதிர்பார்த்து வரும் ஒரு வில்லனாக ஒரளவிற்கு கொண்டு வந்த திரைப்படம் புஷ்பா என்று சொல்லலாம். மொட்டையடித்த பழிவாங்கும் குணம் கொண்ட ஒரு ரத்தவெறி பிடித்த வில்லனாக இந்தப் படத்தில் ஃபஹத் நடித்திருந்தார். ஆனால் புஷ்பா படத்தில் வந்துபோகும் பல வில்லன்களில் அவரும் ஒருவராக இருந்து படத்தின் கடைசி நேரத்தில் முக்கிய வில்லனாக மாறுவார்.
மாமன்னன்
வழக்கமாக வில்லன்கள் பெரிய உடலை வைத்துக்கொண்டு முரட்டுத்தனமாக தோற்றம் அளிப்பவர்களாக மட்டுமே இருப்பதாகவே பெரும்பாலான சினிமாக்கள சித்தரிக்கின்றன. வெகு சில வில்லன் கதாபாத்திரங்களே ஒரு நடிகரின் நடிப்பால் மக்களால் பேசப்படுகின்றன. தனது நடிப்பாற்றலை வெறும் கண்களில் வெளிப்படுத்தக் கூடியவர் ஃபஹத் ஃபாசில். மாமன்னன் படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசியல் மற்றும் பதவி வெறிகொண்ட ஒருவனாக ஃபஹதின் கதாபாத்திரம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தோன்றுகிறது. அதே நேரத்தில் இரையை கவனித்து அதை ஓடவிட்டு நேரம் பார்த்து அதன் கழுத்தை பிடிக்கும் ஓநாயின் கூரூரத்தை அந்த கண்களில் நாம் கற்பனை செய்வதில் மிகை எதுவும் இல்லை.