ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் தான் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் உடன் உறவில் இருப்பதாகப் பதிவிட்டதை அடுத்து சோஷியல் மீடியா முழுவதும் அது பற்றிய பேச்சாகவே உள்ளது. தாங்கள் இருவரும் உறவில் இருப்பதாகவும் இன்னும் திருமணம் அளவுக்கு செல்லவில்லை என்றும் எனினும் அதுவும் ஒருநாள் நடக்கும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தாங்கள் இருவரும் மாலத்தீவில் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இதை அடுத்து இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வெளியாகி வருகின்றன. சுஷ்மிதா சென் தனது பதிவில் ‘மோதிரம் இல்லை..இன்னும் திருமணம் இல்லை..நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். என்னைச் சுற்றி என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சுஷ்மிதா சென் மே மாதம் தனது நீண்டநாள் பாய்பிரெண்டான காஷ்மீர் மாடல் ரோமன் ஷாலை பிரிந்துவிட்டதாகவும் நீண்ட நாட்களுக்கு முன்பே தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையேதான் தற்போது இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவரை நேசிப்பதும் டேட் செய்வதும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை விருப்பம் என்றாலும் பொதுமக்களுக்கு நெல் கிடைத்தால் சும்மாவா விடுவார்கள் அதை அவலாக்கிவிடுவார்கள் கணக்காக பல்வேறு தரப்பினரையும் அனுகி வருகின்றனர். அந்த வரிசையில் ரோமன் ஷாலிடமே கருத்து கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர் ‘அவர்களுக்காக மகிழ்ச்சியாக இருப்போமே. சுஷ்மிதாவே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் அவர் மிகவும் சிறந்தவராகத்தான் இருப்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.