ஆடையில்லாமல் புகைப்படங்களை அனுப்பச் சொல்வார்கள். அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டாதான் பிழைக்க முடியும் என நம்பவைப்பார்கள் என்று மாடலிங் உலகின் மறுமுகம் பற்றி மனம் திறந்துள்ளார் நடிகர் அங்கித் சிவாச்.


உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அங்கித் சிவாச், தொலைக்காட்சி நடிகர். இவர் நடிப்பில் வெளியான ரிஷ்தோன் கா சக்ரவியூஹ் மிகவும் பிரபலமான நாடகம். அதில் அவர் அதிராஜ் பாண்டே என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். அவர் நடிப்பில் வெளியான மன்மோஹினி, இஷ்க் மேன் மர்ஜவான் 2, பேஹத் 2, ஆகிய நாடகங்கள் பிரபலமானவை. இப்போது தொலைக்காட்சித் தொடர்களில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ள அங்கித் சிவாச், ஆரம்ப நாட்களில் மாடலாக வேண்டும் என்ற விருப்பத்தில் மாடலிங் துறையில் காலடி எடுத்துவைத்தபோது சந்தித்த இன்னல்களைத் தெரிவித்துள்ளார்.


அவர் அளித்த பேட்டியில், நான் 2017ல் தான் தொலைக்காட்சியில் காலடி எடுத்துவைத்தேன். ஆனால் அதற்கும் 12 ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாடலிங்கில் கால்பதித்துவிட்டேன். ஆனால் 4 மாதங்களிலேயே அதைவிட்டு வெளியே வந்தேன். அதுவரை நான் பார்த்த உலகம் வேறு. மாடலிங் உலகம் வேறாக இருந்தது. என்னை அங்கு யாருமே சிந்திக்கவிடவில்லை. பேசவிடவில்லை. நான் பார்ப்பதற்கு அழகாக இருப்பேன். விதவிதமான ஆடைகளைத் தருவார்கள் புகைப்படம் எடுப்பார்கள். அவ்வளவு தான்.


சில நாட்களிலேயே எனக்கு மாடலிங் உலகின் கலாச்சாரம் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்றே நினைத்திருந்தேன். அது எனது பலவீனம் என்பதை அந்த 4 மாதங்களில் தெரிந்து கொண்டேன். அங்கே யார் வேண்டுமானால் உங்கள் மீது அத்துமீறுவார்கள். அங்கே இருக்கும் சில மனித மிருகங்கள் அப்படியே உங்களை மென்றுவிடும். அதை நான் அனுபவித்திருக்கிறேன். என்னை சிலர் ஆடையில்லாமல் புகைப்படம் அனுப்புமாறு சொல்லியிருக்கிறார்கள். டெல்லியில் நான் பட்ட இன்னல்கள் மும்பை வந்தவுடன் மாறவில்லை. மும்பை இன்னும் பெரிய இன்னல்களுக்கு என்னை எதிர்கொள்ளச் செய்தது.





எங்கு பார்த்தாலும் வல்லூறுகள். நிறைய நாட்கள் நான் அழுதிருக்கிறேன். எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் உயர் பதவியில் இருப்போர் மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வது கூட மனித இயல்பு என்று என்னை நம்ப வைத்தது. எனக்கு நிறைய ஆண்களே புரொபோஸ் செய்தார்கள். சிலர் படுக்கைக்கு அழைத்தனர். காம்ப்ரமைஸ் பண்ணால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என சில நடிகர்களின் பெயர்களையும் உதாரணத்துக்கு சொன்னார்கள். ஒருக்கட்டத்தில் அதுதான் உண்மையோ என்றுகூட நானே யோசித்தது உண்டு. ஆனால் அங்கு ஒரே நல்ல விஷயம், யாரும் என்னை பலவந்தப்படுத்தவில்லை என்பது மட்டுமே. உடல் ரீதியான பலவந்தங்கள் இல்லையென்றாலும் மன ரீதியாக அந்த உலகம் தந்த அதிர்ச்சி மிகக் கொடியது” என்று கூறியுள்ளார்.