மாமன்னன் படத்தை குறித்து முன்னாள் சபாநாயகர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுக முன்னாள்  சபாநாயகர் தனபால் அவர்களின் நிஜ வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாக தற்போது விவாதம் எழுந்துள்ளது.சேலத்தில் ராசிபுரம் தொகுதி எம், எல் .ஏ வாக இருந்தவர் தனபால். தனபாலின் தொகுதியான ராசிபுரம் படத்தில் காசிபுரம் என்று படத்தில் மாற்றப்பட்டிருந்தது. இது குறித்து  தனபால் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


”மாமன்னன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை . ஆனால் படம் என்னுடைய சாயலில் இருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் படத்தில் சித்தரிக்கப்பட்டதாக சொல்லப்படும்  அளவிற்கான ஒடுக்குமுறையை நான் நிஜத்தில் சந்தித்ததில்லை. ராசிபுரம் தொகுதியில் ஒரு சில இடங்களில் சின்ன சின்ன அளவிலான சாதீய ரீதியிலான ஒடுக்குமுறைகள் இருந்தன என்றாலும் பெரிய அளவிலான நிகழ்வுகள் ஏதும் இல்லை.  


இது அம்மாவின் வெற்றி


 1972 ஆம் ஆண்டில் இருந்து நான் அதிமுக கட்சியின் தீவிர விஸ்வாசி. அதன் காரணத்தினால் அம்மா எனக்கு அமைப்புச் செயலாளர் பதவிக் கொடுத்தார். பின் கூட்டுறவு உணவுத்துறை அமைச்சராக்கினார். இதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை எனக்கு கொடுத்தார் அம்மா.  அதிமுக கட்சிக்கு நான் பல  வருடங்களாக உழைத்திருக்கிறேன். என்னுடைய திறமைக்காகவும்  கட்சிக்கு என்னுடைய  விஸ்வாசத்திற்கும் என்னை அம்மையார் ஜெயலலிதா சபாநாயகர் ஆக்கினார்.  மாமன்னன் படம் என்னுடைய சாயலில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது நிச்சயம் அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்வேன்“ என்று கூறியுள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்கள்.


மாமன்னன்


மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஆகியவர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  ஜூன் 29-ஆம் தேதி மாமன்னன் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் கதைக்களம் பல்வேறு  விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது


படத்தின் கதை


மாமன்னன் படம் பார்த்த பலரும் வடிவேலுவின் கேரக்டர் முந்தைய அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலை நியாபகப்படுத்துவதாக குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


அதற்கு முதல் காரணம் கொங்கு மண்டலத்தில் இந்த கதையானது அமைக்கப்பட்டுள்ளது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தனபால் அதிமுக சார்பில் 1977-ஆம் ஆண்டு முதல், 2021-ஆம் ஆண்டுவரை காலகட்டத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் 7 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல், சேலம், திருப்பூர் சங்ககிரி, ராசிபுரம் , அவிநாசி  தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.