பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ் குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் சமீப காலமாக தமிழ்த் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருவது. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்டுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை மணிரத்னம் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.


ஆனால் அவருக்கு முன்னதாகவே வெப் சீரிஸை அறிவித்திருந்தார் செளந்தர்யா ரஜினிகாந்த். இந்த வெப் சீரிஸ் குறித்து ஏனோ தகவல் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் அது குறித்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.


அந்த ட்வீட்டில், ஒவ்வொரு ப்ராஜட்டுக்கும் ஒரு பயணமும் அதற்கு ஓர் இலக்கும் இருக்கும். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நான் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்கிறேன். பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ் முதல் சீஸன் புது வெள்ளம் என்ற பெயரில் தொடங்குகிறது. நிறைய தடைகளைத் தாண்டி பயணம் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார்.


அந்த ட்வீட்டுடன் வெப் சீரிஸுக்கான திரைக்கதை புத்தகத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். வெப் சீரிஸ் ஆலோசனைக் கூட்டத்தின் புகைப்படத்தையும் சேர்த்தே செளந்தர்யா பகிர்ந்துள்ளார்.
செளந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கெனவே கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இருப்பினும் பொன்னியின் செல்வன் வெப் சீரிஸை அவர் தயாரிக்க சரத்குமார் ஜோதி இயக்கவிருக்கிறார். இதனையும் செளந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.




கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வம் புதினத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று முதன்முதலில் ஆசைப்பட்டவர் எம்ஜிஆர் தான். ஆனால், ஏனோ பல காரணங்களால் அது வாய்க்காமலேயே போனது இருந்தாலும் கூட பொன்னியின் செல்வன் பல கலா ரசிகர்களின் திரைக்கனவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தான் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அறிவித்தார். காஸ்ட் அண்ட் க்ரூ அறிவிக்கப்படும் வரை பொன்னியின் செல்வன் வருமா வராதா என்றே ரசிகர்கள் சந்தேகத்துடன் இருந்தனர். ஆனால், படப்பிடிப்பையும் தொடக்கி முதல் பாக படப்பிடிப்பை ஜெட் வேகத்தில் நடத்திக் காட்டினார் மணிரத்னம். இப்போது எல்லோரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெள்ளித் திரையில் காண காத்திருக்கும் போது தனது பெருங்கனவான பொன்னியின் செல்வன் வெப் சீரிஸை அறிவித்துள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.



வெள்ளித் திரையா? இல்லை ஓடிடியா? பொன்னியின் செல்வன் எதில் மிளரப் போகிறது. எந்த ஆக்கம் துல்லியமாக மக்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கப்போகிறது என்பதை எல்லாம் ரசிகர்கள் தீர்மானிப்பார்கள். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கதை ஆக்கத்தின் சிறப்பே அதைப் படிக்கும்போதே ஒவ்வொரு மனதிலும் அது காட்சிகளாகத் தான் விரியும். எழுத்திலேயே காட்சியைக் காட்டியவரின் திறமைக்கு நியாயம் செய்யுமா ஒரிஜினல் திரைக்காவியங்கள் என்று பார்ப்போம்.