இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு நடிகர் சரத்குமார், இயக்குநர் சுசீந்திரன், பிரசன்னா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் மாரிமுத்து. குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. நடிப்பு மட்டும் இல்லாமல் பிரசன்னா நடித்த‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த ஜெயிலர் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இன்று காலை எதிர்நீச்சல் படத்துக்காக டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமார் நேரில் சென்று மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வைரமுத்து வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘ மாரிமுத்துவின் மரணச்செய்தி கேட்டு ஒரு கணம் தனது உடல் ஆடி அடங்கியதாகவும், தேனியில் நான் தான் திருமணம் செய்து வைத்தேன்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட இரங்கல் வீடியோவில், நடிகர் மற்றும் இயக்குநர் மாரிமுத்து அண்ணனின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவருடன் இணைந்து ஜீவா படத்தில் பணியாற்றியுள்ளேன். அற்புதமான நடிகர் என உறுக்கமாக இறங்கல் பதிவு தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சசிகுமார், மாரிமுத்துவின் மறைவு செய்தி அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சாந்தனு மாரிமுத்துவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பிரசன்னா வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “"நாங்கள் சகோதரர்களைப்போல இருந்தோம்" என குறிப்பிட்டுள்ளார். பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தை மாரிமுத்து இயக்கி இருந்தார். சில நேரங்களில் வாழ்க்கை நம் தலையில் கல்லால் அடிக்கும் என மாரிமுத்துவின் மறைவுக்கு இயக்குநர் பாண்டிராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் நெல்சன், உங்களுடன் இருந்த தருணங்களை நினைவுபடுத்துவதாக டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.