மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் நரனவாரே தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
2018 ஆம் ஆண்டு நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக மாரி செல்வராஜ் அறிமுகமானார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியான பாராட்டுகளை குவித்த இப்படம் வணிக ரீதியாகவும் பலரையும் கவர்ந்தது. சாதிய பாகுபாடுகள் குறித்து இப்படம் பேசியிருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி அதில் வெற்றியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மாமன்னன் படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ஈரோடு கூடுதல் ஆட்சியர் மனிஷ் நரனவாரே தெரிவித்துள்ள கருத்து ட்ரெண்டாகியுள்ளது.ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ நான் திருநெல்வேலி சப்கலெக்டராக இருந்தபோது, 2018ல் நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள். உண்மையான நிலவரத்தை உடைக்கும் படம்.
அப்படிப்பட்ட படம் பண்ணிய தைரியத்துக்காக அவருக்கு என் பாராட்டுகள். நேற்று மீண்டும் படம் பார்த்தேன். திங்களூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் உரையாடினேன், “மனிதர்கள் அனைவரும் சமம்” என்ற இந்த திரைப்படத்தின் முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்’ என தெரிவித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.