திரைப்படங்களுக்கு ஆஸ்கர் என்றால் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எம்மி விருதுகள். தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இந்த எம்மி விருதுகள் வழங்கும் விழா இன்று (செப்.13) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.


இதில் ஆங்கிலம் அல்லாத முதல் வேற்று மொழி தொடராக கொரிய தொடரான ’ஸ்குவிட் கேம்’ தொடர் 14 பிரிவுகளில் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் சிறந்த நடிகர் (லீடிங் பெர்ஃபாமன்ஸ்), சிறந்த கௌரவ நடிகை ஆகிய விருதுகளை வென்று ஸ்குவிட் கேம் தொடர் அசத்தியுள்ளது. இந்த விருதுகளை நடிகர்லீ ஜங் ஜே, நடிகை லீ யு மி இருவரும் பெற்றுக்கொண்டனர்.


 






விருது பெற்றைதைத் தொடர்ந்து பேசிய நடிகர் லீ ஜங் ஜே, ”இது நான் வாங்கும் கடைசி எம்மி விருதாக இருக்காது என நம்புகிறேன்” என இரண்டாவது சீசனைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.


 






இவை தவிர, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த கதை மற்றும் சமகால நிகழ்ச்சி ஆகியவற்றுக்கான விருதுகளையும் ஸ்குவிட் தொடர் குவித்து சாதனை புரிந்துள்ளது.


பட்டி தொட்டியெல்லாம் ஹிட் 


கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர், 45.6 பில்லியன் பரிசுத் தொகையை வெல்ல விளையாடும் ஒரு வித்தியாசமான விளையாட்டைச் சுற்றி ஸ்குவிட் கேமின் திரைக்கதை நகர்கிறது.





 


 


மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. மேலும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இந்தியாவில் பெருவாரியான பார்வையாளர்களைப் பெற்று இந்திய சந்தையில் வலுவாகக் காலூன்ற ஸ்குவிட் கேம் தொடரே அடித்தளமிட்டதாகத் தகவல்கள் முன்னதாக வெளிவந்தன.


முன்னதாக இத்தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதை டீசர் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் தொடர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.