எலான் மஸ்க் 


உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா , ஸ்பேச் எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு தலைவராக இருந்து வருகிறார். மின்சார வாகணங்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். இதனைத் தொடர்ந்து தற்போது இணைய சேவையை வழங்கும் செயற்கை கோள்களை விண்வெளியில் ஏவுவது தொடர்பான ஆராய்ச்சிகளில் முனைப்பு காட்டி வருகிறார். மேலும் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப் படும் வகையில் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தையும் கண்டுள்ளார். 


தான் நம்பும் கருத்தை தவிர்த்து பிற கருத்துக்களை தடாலடியாக மறுக்கும் பழக்கம் கொண்டவர் எலான் மஸ்க். ஹைட்ரஜன் எரிவாயு மூலம் இயங்கும் கார்கள் என்பது சாத்தியமற்ற ஒன்று அது சாத்தியம் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள் என்று சில ஆண்டுகள் முன்பு மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஹைட்ரஜன் மூலம் இயங்கும் கார்கள் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ளன. இப்படி தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார் எலான் மஸ்க். அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சியை நக்கலடித்து வருகிறார் எலான் மஸ்க் 


தமிழ் படத்தின் மீம் பகிர்ந்த எலான் மஸ்க்


உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் , ஐமேக் , ஐபாட் போன்ற சாதனங்களை வழங்கி வருகிறது. ஆப்பிள் தயாரிக்கும் தொழில் நுட்ப சாதங்கள் முதன்மையாக ஐஓஎஸ் இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுபவை. மற்ற ஆண்ட்ராய்டு ஃபோன்களைக் போல் எல்லா செயலிகளையும் ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்த முடியாது. கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் செயலிகளை கூட ஆப்பிள் ஃபோன்களில் பயன்படுத்த முடியாது. இதே போல் ஆப்பிள் சாதனங்களை தனித்துவமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற பல்வேறு முன்னெடுப்புகளை ஆப்பிள் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஓப்பன் ஏஐ என்கிற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஆப்பிள். இதன்படி செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப செயலிகளை ஆப்பிள் ஃபோன்களில் பயன்படுத்தும் முயற்சியாக இந்த கூட்டணியை அமைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம் . இதற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.  ஐஃபோனில் ஏஐ அதன் சாட் ஜிபிடி ஜெனெரேட்டிவ் மாடலை பயன்படுத்தினால் அது வாடிக்கையாளர்களின் தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தானதாக இருக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 


குஷியில் தப்பாட்டம் படத்தின் நடிகர்






ஆப்பிளின் இந்த முயற்சியை பகடி செய்யும் விதமாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில்  தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான தப்பாட்டம் படத்தின் காட்சி ஒன்றை மீமாக பகிர்ந்துள்ளார். இந்த மீம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தப்பாட்டம் படத்தின் நடிகர் துரை சுதாகர் எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். “ நான் களவானி படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். இன்று மரியாதைக்குரிய எலான் மஸ்க் தப்பாட்டம் படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். இது ஒரு சிறிய அளவில் எடுக்கப் பட்ட படம் . இந்த அளவிற்கு இந்தப் படத்தை உலகளவில் பிரபலமாக்கிய எலான் மஸ்க் மற்றும் மீம் கிரியேட்டர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்