தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமாி வெற்றி பெற்றவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி பல வெற்றிப்படங்களை தந்து முன்னணி கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.



விஜய் ஆண்டனியின் ககன மார்கன்:


தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ககன மார்கன். இந்த படத்தை ரோமியோ படத்தை தயாரித்த மீராவிஜய் தயாரிக்கிறார். ககன மார்கன் படத்தை லியோ ஜான் பால் இயக்குகிறார்.


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்த படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது. லியோ ஜான் பால் தமிழ் திரையுலகின் முன்னணி எடிட்டரில் ஒருவர் ஆவார். இவர் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர்.

த்ரில்லர் படம்:


இவர் 2013ம் ஆண்டு  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்பட தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ககன மார்கன் படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.


இதில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில்  ‘காற்றின் வழி பயணிப்பவன்’ என்று பொருள் ஆகும். இந்த படத்தின் கதைக்களமானது தமிழ் பாரம்பரிய மரபு சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய புலனாய்வு திரைக்கதை மற்றும் வித்தியாசமான அம்சங்களுடன் உருவாகியுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

ரிலீஸ் எப்போது?


இந்த படத்தில் நீருக்கு அடியில் எடுக்கப்படும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்கள் மற்றும் தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில் படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.