சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் எடுக்கப்பட்ட படம் “தி கேரளா ஸ்டோரி”. அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி, சித்தி இத்னானி மற்றும் தேவதர்ஷினி என பலரும் நடித்த இப்படத்தை விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கதை என கூறப்பட்ட இப்படத்தில் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் லவ்ஜிகாத் என்னும் பெயரில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது தொடர்பாகவும், அவர்கள் ISIS அமைப்பில் சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.
கேரளா ஸ்டோரி மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானதில் இருந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் அனுராக் காஷ்யப், கமல்ஹாசன், நசிருதீன் ஷா போன்ற பிரபலங்கள் படத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அதனை தொடர்ந்து திரைப்பட எடிட்டர் பீனா பால் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இப்படத்தை உண்மையில்லாத தவறான படம் என தி கேரளா ஸ்டோரி படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “2018ம் ஆண்டு மலையாளத்தில் பல முக்கியமான நல்ல படங்கள் வெளியாகின. ஆனால் அவற்றிக்கு வரி விலக்கு உள்ளது என்றும் உங்களை ஊக்குவிக்கிறது என்பதற்காகவும் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். நான் மிகவும் வருத்தப்படுகிறேன், ஏனென்றால் அந்த படம் தலைப்புச் செய்திகளில் வருவதற்கு எந்த காரணமும் இல்லை. இது உண்மைக்குப் புறம்பான படம். பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது உண்மையில் தவறானது என்று ஒருவர் கேள்விப்பட்டுள்ளார். அதில் சினிமாவிற்கான எந்த மதிப்பும் இல்லை. ஆனால், ஒருவேளை இது இந்த நாட்டில் உள்ள சிலரின் விருப்பத்திற்கு உணவளிக்கும் ஒரு கதையாக இருக்கலாம்.
கேரளாவில் ஏன் இப்படம் வரவேற்கப்படவில்லை என்பது குறித்து கேட்கப்பட்ட போது அப்படம் நன்றாக இருக்காது என கேரளா பார்வையாளர்கள் கூறியதை நினைத்து பெருமைப்படுகிறேன். 2018 அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது, இது சமூகத்தை கட்டமைக்கும் கதைக்கு நேர் எதிரானது என தெரிவித்து இருந்தார் பினா பால்.