தமிழ் சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக அறிமுகமானவர்களில் ஒருவர் ஜீவா. 12B படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து அவர் உருவாக்க திட்டமிட்ட 'பெப்சி' படத்தின் திரைக்கதை ஏனோ பல காரணங்களால் தடைகளை சந்தித்து முடங்கிப்போனது. பின்னர் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து 'உள்ளம் கேட்குமே' என்ற பெயரில் 2005ம் ஆண்டு வெளியானது.
ஐந்து கல்லூரி நண்பர்கள் இடையே உருவாகும் காதல், பிரிவை மையமாக வைத்து ஒரு வித்தியாசமான திரைக்கதையை அமைத்த ஜீவாவிற்கு 'உள்ளம் கேட்குமே' ஒரு வெற்றி படமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்த நண்பர்கள் ஒன்றாக இணையும்போது அவர்களுடன் சேர்த்து பார்வையாளர்களையும் பூரிக்க வைத்தது.
ஆர்யா, பூஜா மற்றும் அசின் அறிமுகமான படம் என்றாலும் காலதாமதத்தால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேறு படங்களின் மூலம் பிரபலமானார்கள். ஏராளமான திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து இருந்தாலும் உள்ளத்தை கொள்ளை கொண்டது துறுதுறுப்பான லைலா தான்.
நட்பின் பெருமையை பறைசாற்றி எத்தனையோ திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளன, அந்த வகையில் இப்படம் பார்வையாளர்களின் கல்லூரி வாழ்க்கையை நினைவூட்டியது. அவர்களின் டீனேஜ் நட்பு வட்டம், கல்லூரியில் மலர்ந்த முதல் காதல் அவற்றை நினைத்து மனதை ஊஞ்சலாட செய்தது. படம் முதலில் வெளியான போது ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் போன படம் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வெற்றி பெற்றது.
தாமதமாக வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறாது என்ற சென்டிமென்டை உடைத்தது உள்ளம் கேட்குமே. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை காதுகளுக்கு இனிமை சேர்த்தது. என்னை பந்தாட பிறந்தவளே, ஓ மனமே, மழை மழை போன்ற பாடல்கள் பலரின் பிளே லிஸ்டில் நிச்சயம் இன்றைக்கு இடம்பெற்றுள்ள பாடல்கள். படத்தின் வெற்றிக்கு பாடல்களுக்கும் ஒளிப்பதிவும் முக்கியமான காரணமாக அமைந்தன. வெற்றி பெற்ற இப்படம் பின்னர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
கல்லூரி நாட்களுக்கு நம்மை ரீவைண்ட் செய்த உள்ளம் கேட்குமே இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.