கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான நாயகர்களாக அறிமுகமானார்கள். சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமானார். துல்கர் சல்மான் செகண்ட் ஷோ திரைப்படத்தில் அறிமுகமானார். இன்று பிப்ரவரி 3 ஆம் தேதி இருவரும் திரைத்துறையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
14 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயன்
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திக் கொண்டார். அந்த வகையில் மாவீரன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதே போல் 2024 ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பராசக்தி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகராக இப்படம் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு புதுமுக இயக்குநர்களின் படங்களையும் தொடர்ச்சியாக தயாரித்து வருகிறார். அடுத்தபடியாக வெங்கட் பிரபு , ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் .
அடுத்த படம்
தற்போது தாய்கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. இதற்கான ஒரு ப்ரோமோஷன் வீடியோவும் விரைவில் வெளியாக இருக்கிறது.
14 ஆண்டுகளை நிறைவு செய்யும் துல்கர் சல்மான்
இதே நாளில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானார். பிரபல நடிகரின் வாரிசு என்பதால் துல்கர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமில்லாமல் இந்தி , தமிழ் என அனைத்து மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து பெரியளவில் ரசிகர்களை சம்பாதித்துள்ளார். துல்கர் சல்மான் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான லோகா திரைப்படம் பான் இந்திய வெற்றிபெற்றது. இதனை ஒட்டி வெளியான காந்தா திரைப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் ஐ ஆம் கேம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது