ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். ஆனால், அப்போதெல்லாம் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே பேசிவந்த பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, தற்போது வர்த்தக ஒப்பந்தத்திற்காக ரஷ்ய எண்ணெயை புறக்கணிக்க  அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுள்ளது, இந்தியா மற்றும் ரஷ்யாவின் தொன்றுதொட்ட நட்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஒருவழியாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது அந்த வரியை 18 சதவீதமாக இறுதி செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பதிவிட்ட அவர், பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாகவும், இந்தியாவின் ஆற்றாலுக்கான ஆதாரத்தோடு, இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதாரா கூட்டாண்மையையும் இந்த ஒப்பந்தம் ஆழமானதாக மாற்றும் என்றும் கூறியுள்ளார்.

இழுபறியில் இருந்தது ஏன்.?

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பல மாதங்களாக இறுதி செய்யப்படாமல்  அமெரிக்காவால் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. அதற்கு காரணம், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியது தான். ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலமாக, இந்தியா, உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என கூறி வந்தார்.

ஆனால், இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்ததால், இறக்குமதி வரியாக 25 சதவிதமும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதனால் அபராதமாக 25 சதவீத வரி என, மொத்தம் 50 சதவீத வரியை இந்தியாவிற்கு விதித்தார் ட்ரம்ப். மேலும், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தையும் இறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தார்.

ரஷ்யா உடனான நட்பு நீண்ட காலமானது, விட முடியாது - இந்தியா

ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகத்தை புறக்கணிக்குமாறு ட்ரம்ப் கூறிவந்தபோது, இந்தியா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை "நியாயமற்றது" என்று இந்தியா கூறியதுடன், நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதாகவும் சபதம் செய்துள்ளதாக தெரிவித்தது.

மேலும், எந்தவொரு பெரிய பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் திட்டவட்டமாக கூறியது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தனிமைப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டையும் இந்தியா எதிர்த்தது.

அதோடு, ரஷ்யா இந்திவிற்கு நீண்ட காலமாக மிகவும் நெருக்கமான நட்பு கொண்ட நாடு என்றும், ட்ரம்பின் அச்சுறுத்தல்களை மீறி, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று இந்திய அரசு உறுதிபட தெரிவித்தது.

இதனிடையே, ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளன என்று ரஷ்யா கூறியது.

அமெரிக்காவிற்காக பழைய நட்பை கைவிட்ட மோடி.?

இப்படி, இந்தியா ரஷ்யா உடன் ஆழமான நட்பை வெளிப்படுத்திய சூழலில், தற்போது அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்காக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு பதிலாக, வெனிசுலா மற்றும் அமெரிக்காவிடமே கச்சா எண்ணயை வாங்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம், அமெரிக்காவிற்கு இந்தியா அடிபணிந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், புதிய நண்பர் ட்ரம்ப்பிற்காக, நீண்ட கால நண்பர் புதினை இந்தியா கைவிட்டுவிட்டதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே ரஷ்யாவை ‘நண்பேன்டா‘ என்று கூறிய இந்தியா, இப்போது என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.