ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். 


ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் பல்வாள் தேவனாக நடித்து மிரட்டி இருப்பார். இதேபோல் அண்மையில் அனு ராகவபுடி இயக்கிய சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் நடித்து அசத்தி இருப்பார். போர் வீரனின் காதல் ஓவியத்தை கூறும் சீதா ராமம் படம் பெரிய அளவில் வெற்றது. இந்த நிலையில் பாகுபலியின் அதிரடி வில்லனும், சீதா ராமம் படத்தின் மென்மை ஹீரோவாகவும் இருந்த துல்கர் சல்மானும் ஒன்றிணைந்து படம் நடிக்க உள்ளனர். 


இருவரையும் வைத்து எடுக்கப்படும் படத்துக்கு காந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. துல்கர் சல்மானின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் 'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ எனும் டாக்குமென்டரி வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் செல்வமணி செல்வராஜின் அடுத்த படைப்பாக காந்தா இருக்கும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 


இதில் முக்கிய கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. காந்தா படத்தின் அறிவிப்பு குறித்து பேசிய ராணா, “ நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிது. காந்தா அதுபோன்ற ஒரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது. இந்த பயணத்தை தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மான் மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி, வெளியான ஒரு சிறிய முன்னோட்டம் தான் இது. பிறந்த நாள் வாழ்த்துகள் துல்கர் சல்மான். காந்தா உலகிற்கு வரவேற்கிறேன்” என கூறியுள்ளார். 


காந்தா படத்தில் இணையும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அபிலாஷ் ஜோஷி இயக்கி இருக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.