தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் சாக்லேட் பாய், ரசிகர்களின் ஃபேவரட் ஹார்ட் த்ரோப் துல்கர் சல்மான். மலையாள திரையுலகின் மாபெரும் நட்சத்திரமான மெகாஸ்டார் மம்மூட்டியின் மகன் என்ற அறிமுகத்துடன் படங்களில் தனது பயணத்தை தொடங்கியவர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  


 



2012ம் ஆண்டு வெளியான  'செகண்ட் ஷோ' படம் மூலம் அறிமுகமான துல்கர் சல்மான் 10 ஆண்டுகளாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரின் இரண்டாவது படமான 'உஸ்தாத் ஹோட்டல்' ஒரு வெற்றி படமாக அமைந்து அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நேரடியாக நடித்த உண்மையான பான் இந்தியன் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார். 'பெங்களூர் டேஸ்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' மற்றும் 'ஓகே கண்மணி' உள்ளிட்ட படங்கள் துல்கர் சல்மானை தமிழ் ரசிகர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்தது. அதே போல தெலுங்கில் 'சீதா ராமம்' மற்றும் 'மகாநடி' படங்களும் ஹிந்தியில் 'சுப்' உள்ளிட்ட படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மலையாளத்தில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 


அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் நடிகர்களில் ஒருவராக திகழும் துல்கர் சல்மானுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து ஏஜ் குரூப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக திகழ்கிறார் துல்கர் சல்மான். சினிமா துறையில் மட்டும் ஒரு வெற்றியாளராக இல்லாமல் மிகவும் சக்ஸஸ்ஃபுல் பிசினஸ்மேனாகவும் கலக்கி வருகிறார். 


 



கடந்த ஆண்டு வெளியான தெலுங்கில் உருவாகி பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் துல்கர் சல்மான் திரைப்பயணத்தில் சிறந்த ஒரு படமாக அமைந்தது. படம் பார்த்த அனைவருக்கும் ராம் பற்றின நினைவலைகள் பல நாட்களுக்கு உருண்டோடியது. அந்த அளவிற்கு யதார்த்தமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 


துல்கர் பிறந்தநாளான இன்று ஒரு ஸ்பெஷல் தகவலாக தேசிய விருது பெற்ற 'சூரரைப் போற்று' டீம்  மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார்கள். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் இந்த 43வது திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைகிறார் துல்கர் சல்மான் என்ற அறிவிப்பு அவரின் பிறந்தநாளான இன்று வெளியாகி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  


மேலும் பல வெற்றிப் படங்கள் அமைய வேண்டும் என்றும் இன்று போல் என்றும் நிறைவான ஒரு பயணத்தை தொடர பிறந்தநாள் வாழ்த்துக்கள்!