தமிழ் சினிமா எப்போதும் நல்ல திறமையான நபர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். திறமையுள்ள கலைஞர்கள் அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.
புதிய நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன்:
அந்த வகையில் தமிழ் சினிமாவின் புதிய நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இந்திய சினிமாவில் வேறு எந்த மொழி சினிமாவிலும் இல்லாத வகையில் ஒரு விஷயத்திற்கான வரையறையை உடைப்பவர்களுக்கு நல்ல அங்கீகாரமும், வரவேற்பும் அளிப்பது தமிழ் சினிமா.
கதாநாயகர்களுக்கு என்று இருக்கும் சிவப்பு நிறம், உயரம், சுருள் கூந்தல் என பல விஷயத்தை உடைத்தவர்கள்தான் தமிழ் சினிமாவின் முன்ணனி கதாநாயகர்களாக உள்ளனர்.
உழைப்பால் உயர்ந்தவர்:
அந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். சாதாரண விளம்பர பட இயக்குனர், குறும்பட இயக்குனராக இருந்தவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். முதல் படமான கோமாளி படம் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து பலரது பாராட்டையும் பெற்றவர்.
தன்னுடைய இரண்டாவது படமான லவ் டுடே படத்தை இயக்கியதுடன் கதாநாயனாகவும் நடித்தார். ஒல்லியான தேகம், கருப்பு நிறம் என இருந்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்ததை சிலர் விமர்சித்தபோது, அவரது நடிப்பும், படத்தின் வெற்றியும் பிரதீப் ரங்கநாதனை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதையே வெளிப்படுத்தியது.
மேலும், அவர் அடுத்ததாக நடித்த டிராகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், இன்று திரையரங்கிற்கு படையெடுக்கும் 2கே கிட்ஸ்களை கவரும் விதமாக படத்தை எடுக்க வேண்டும் என்றும், அவர்களின் நாடித்துடிப்பையும் அறிந்து கொண்டதாலே அவர்களை மையப்படுத்தி தற்போது டூட் படத்தையும் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதனால், 2 கே கிட்ஸ் கொண்டாடும் மிகப்பெரிய நாயகனாக உருவெடுத்துள்ளார்.
தயாரிப்பாளர்களின் முதன்மைத் தேர்வு:
லவ் டுடே படம் ரூபாய் 80 கோடிக்கும் மேல் வசூலை குவித்த நிலையில், டிராகன் படம் ரூபாய் 150 கோடிக்கு வசூலை குவித்தது. தற்போது வெளியாகியுள்ள டூட் படம் வெளியாகிய ஒரு வாரத்திற்குள்ளே ரூபாய் 100 கோடியை நெருங்கியுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களின் முதன்மைத் தேர்வாக பிரதீப் ரங்கநாதன் மாறியுள்ளார்.
மேலும், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகம் கொண்டாடும் ஒரு நாயகனாகவும் பிரதீப் ரங்கநாதன் மாறியுள்ளார். ரஜினி, கமல் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்ட சூழலிலும், விஜய் ஜனநாயகனுக்குப் பிறகு நடிக்கப்போவதில்லை என்பதாலும், அஜித்தும் கார் ரேஸில் கவனத்தைச் செலுத்தி வரும் சூழலில் இளம் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ் சினிமா உள்ளது.
ஆஸ்தான கதாநாயகன்:
கவின், மணிகண்டன், ஹரிஷ் கல்யாண் என இளம் கதாநாயகர்கள் இருந்தாலும் பிரதீப் ரங்கநாதன் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு தற்போது 2கே கிட்ஸ்களின் ஆஸ்தான கதாநாயகனாக மாறியுள்ளார்.பிரதீப் ரங்கநாதன் இளம் இயக்குனர்களுடனும், புது இயக்குனர்களுடனுமே பணியாற்றுவதால் படத்தின் தயாரிப்புச் செலவும் குறைந்த அளவே உள்ளது.
மேலும், அடிப்படையில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் என்பதால் அது அவருக்கு பக்கபலமாக உள்ளது. கல்லூரி மாணவர்களை கவர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்துவிட்டால் நிச்சயமாக தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத கதாநாயகனாக மாறிவிடுவார். தற்போது பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.