நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் தொடங்கி ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் குரலாக விளங்கிய டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாச மூர்த்தி உயிரிழந்தார்.
தெலுங்கு டப்பிங் கலைஞரான ஸ்ரீநிவாச மூர்த்தி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (ஜன.27) காலமானார்.
1990களில் டோலிவுட்டில் டப்பிங் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீநிவாச மூர்த்திக்கு இயக்குநர் ஷங்கரின் முதல்வன் படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
முதல்வன் பட தெலுங்கு டப்பிங்கான ‘ஒக்கே ஒக்கடு’ படத்தில் நடிகர் அர்ஜூனின் குரலாக விளங்கிய ஸ்ரீநிவாச மூர்த்தி, பெரிதும் கவனமீர்த்தார். இதனிடையே டோலிவுட்டின் பிரபல குரல்களில் ஒன்றாகவும், குறிப்பாக தெலுங்கு படங்களில் வில்லன் பாத்திரங்களுக்கு டப்பிங் செய்தும் ஸ்ரீநிவாச மூர்த்தி பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும், தமிழ் நட்சத்திரங்களான அஜித், விக்ரம் தொடங்கி நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கில் இவரது குரல் முற்றிலுமாக பொருந்திப்போக தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான சூர்யாவின் அனைத்து திரைப்படங்களுக்கும் நிரந்தர குரலாக மாறிப்போனார்.
இவர்கள் தவிர மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தெலுங்கிலும், கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் தெலுங்கு பதிப்பில் டப்பிங் கொடுத்திருந்த ஸ்ரீநிவாச மூர்த்தி, அந்நியன் படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அபரஜிதுடு’ படத்தில் அந்நியன், அம்பி, ரெமோ பாத்திரங்களின் குரலுக்கு விக்ரம் காண்பித்திருந்த வித்தியாசங்களை ஈடு செய்யும் வகையில், இவர் டப்பிங் செய்திருந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ நடிகர் மாதவனின் ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படங்களுக்கு டப்பிங் பேசியிருந்தார். டப்பிங் தவிர ஓரிரு தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிவாசமூர்த்தி தனது நேர்காணல்களில் தொடர்ந்து டப்பிங் கலைஞர்களின் நிதிச் சிக்கல்கள் பற்றி வருத்தம் தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீநிவாச மூர்த்தியின் மறைவுக்கு டோலிவுட் திரை உலகத்தினர் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.