பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரிப்பில் முதன் முறையாக உருவாகும் தமிழ் படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனி நம் அனைவருக்குமே மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் விவசாயம், இராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தோனி தற்போது படத்தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார்.
அதன்படி தோனி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமே தமிழில் தயாராகிறது. இந்த படத்தில் பெண்களின் கனவு கண்ணன் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். நாச்சியார், ஹீரோ, லவ் டூடே போன்ற படங்களில் நடித்த இவானா கதாநாயகியாக நடிக்கிறார். தோனி தயாரிக்கும் இப்படத்திற்கு, “Lets Get Married” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கவுள்ளார். Lets Get Married படத்தை ரமேஷ் தமிழ்மணி எழுதி இயக்குகிறார்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தோனி ரசிகர்களும் Lets Get Married என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த தகவல், தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக தோனி என்டர்டெயின்மென்ட் வணிகத் தலைவர் விகாஸ் ஹசிஜா கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் முக்கிய திரைப்படங்களின் வணிகம் ஒரு தனி நிறுவனமாக மாறிவிட்டது. இனி பிராந்திய மொழி சினிமாக்களுக்கும் பாலிவுட் சினிமாக்களுக்கும் வேறுபாடு இருக்காது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள் வட மாநிலங்களில் சமமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
வெறும் ஒரு மொழி படங்களை மட்டும் தயாரிக்கும் நிறுவனமாக இருக்க தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விரும்பவில்லை. நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள கதைகள் சென்றடைவதே எங்கள் முன்னுரிமையாகும். எங்களின் முதல் படம் தமிழில் எடுக்கப்பட்டாலும் பல மொழிகளில் அவை வெளியாகும்” என்றார்.
ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடிப்படையாக வைத்து 'ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தை தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. "வுமன்ஸ் டே அவுட்" என்ற புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படமும் அவர்களால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது