மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். பரவலாக நல்ல வரவேற்பை பெற்ற தரிஷ்யம் திரைப்படம் கிட்டதட்ட எல்லா இந்திய மொழிகளிலும் உருவானது. தெலுங்கு, இந்தி, கன்னடம், மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட் அடித்தது. தற்போது இன்னொரு வேற்றுநாட்டு சர்வதேச மொழியான இந்தோனேசிய மொழியிலும் அந்த திரைப்படத்தை ரீமேக் ஆகிறது என்ற அறிவிப்பை தரிஷ்யம் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள திரைப்படம் என்ற பெயரை தரிஷ்யம் பெற்றுள்ளது.



இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். ஆனால் தமிழில் அது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், இயக்குனர் ஜித்து ஜோசப் தமிழில் பாபநாசம் 2 ம் பாகம் வருமென்று கூறியிருந்தார். கமல் நடிப்பில் பாபநாசம் 2ம் பாகம் வருமா என்று ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமலஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாலும், இந்தியன் 2 ம் பாகத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு மிச்சம் இருப்பதாலும், ஒரு மாத இடைவெளியில் வேகமாக முடித்து தந்துவிடும் முனைப்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. அப்படியே நிகழ்ந்தாலும் அதில் கவுதமி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லாததால், மலையாளத்தில் நடித்த மீனாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாபநாசம் முதல் பாகத்தை தயாரித்தது நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர். ஸ்ரீப்ரியா பாபநாசம் 2ஆம் பாகத்தை உடனடியாக எடுக்கவேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறாராம். தற்போது உள்ள நிலவரப்படி, தரிஷ்யம் 2ம் பாகம் தமிழுக்கு வருவதற்கு முன்பு இந்தோனேஷியவில் வந்தால் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. அவ்வளவு முனைப்புடன் முதல் பாக வேலைகளை செய்து வருகிறதாம் இந்தோனேஷியா டீம்.



ஜித்து ஜோசப் ஏற்கனவே மோகன் லாலை வைத்து '12த் மேன்' என்று பெயரிடப்பட்ட திரைப்படம் இயக்குவதாக அறிவித்திருந்தார். அந்த திரைப்படத்தையும் மோகன் லாலின் ஆஷிர்வாத் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தான் தயாரிக்கிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. தமிழிலில் பாபநாசம்2 உருவாவதில், கெளதமி கேரக்டர் தான் பிரச்சினையாக இருக்கும் என தெரிகிறது.