பொதுவாக, நாம் சிகரமாக நினைப்பவர்கள், நம்மை புகழ்ந்தால் எப்படி ஒரு சந்தோஷம் ஏற்படும்.? அப்படி ஒரு சந்தோஷத்தில்தான் இருக்கிறார், டிராகன் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன். ஆம், ஒரு மெகா இயக்குநரின் ட்வீட்டைப் பார்த்து வியந்துபோய், ஐ லவ் யூ என்று பதில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரதீப்.
டிராகன் படத்தை புகழ்ந்த பிரமாண்ட இயக்குநர்
சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து, வசூலிலும் கலக்கிக்கொண்டருக்கும் டிராகன் படத்தை பற்றி, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், டிராகன் ஒரு அழகான படம் என்றும், அறபுதமாக எழுதியுள்ள இயக்குநர் அஷ்வத்திற்கு ஹேட்ஸ் ஆஃப் என்றும் தெரிவித்துள்ளார். படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் அழகாகவும், அதே சமயத்தில் முழுமையுடனும் பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
படத்தின் கதாநாயகன் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், பிரதீப் ரங்கநாதன், தான் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஹீரோ என்பதையும், அதே சமயம் வலுவான, இதயம்தொடும் நடிப்பை வெளிப்படுத்துபவர் என்பதையும் நிரூபித்துள்ளத குறிப்பிட்டுள்ளார். மேலும், மிஷ்கின், அனுபமா, ஜார்ஜ் மரியன் ஆகியோரும் மனதில் நிற்கும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, அனைத்து கதாபாத்திரங்களுமே நன்றாக நடித்திருப்பதாகவும், படத்தின் கடைசி 20 நிமிடங்கள் தன்னை அழ வைத்துவிட்டதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஏமாற்று வேலைகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், இப்படி ஒரு கருத்துள்ள படத்தை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் அவர்களுடைய குழுவிற்கும் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் ட்வீட்டிற்கு வியந்து பதிலளித்துள்ள பிரதீப் ரங்கநாதன்
இயக்குநர் ஷங்கரின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள டிராகன் படத்தின் நாயகன் பிரதீப், சார்ர்ர்... உங்கள் படத்தை பார்த்து வளர்ந்து, உங்கள் ரசிகனாக உங்களைப் பார்த்து வியந்த என்னைப் போன்ற ஒரு பையனுக்கு, என்னுடைய பிரியமான இயக்குநரான நீங்கள் என்னை பற்றி பேசுவது என்பது நம்பமுடியாத கனவாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் கூற முடியவில்லை..மிக்க நன்றி சார்..ஐ லவ் யூ என ட்வீட் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.