புறாக்களால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று தான் தனது கணவரின் உயிரையே பறித்துவிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை மீனா. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 


இதனிடையே அவரது கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்தனர்.  மேலும் நடிகர்கள் ரஜினி,பிரபுதேவா, நடிகைகள் லட்சுமி, குஷ்பு,சினேகா, ரம்பா, கலா மாஸ்டர் என பல பிரபலங்களும் மீனா வீட்டுக்கு நேரில் சென்று கணவர் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 


இந்நிலையில் தனது கணவரின் மறைவுக்கு புறாக்களால் ஏற்பட்ட தொற்றுதான் என்று அவர் கூறியுள்ளார். ஒரு யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது: பெங்களூரு வீட்டில் நிறைய புறாக்கள் இருந்தது. அதன் எச்சில், இறகு காரணமாக தான் நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகக் கூறினார்கள். ஐஎல்டி என்று அதனைச் சொல்வார்கள். எங்களுக்கு ஆரம்பத்தில் அதுபற்றி எல்லாம் எந்தப் புரிதலுமே இல்லை. எந்த அறிகுறியுமே ஆரம்பத்தில் இல்லவே இல்லை. அப்புறம் தான் அதைப் பற்றி ஒவ்வொன்றாக தெரிந்தது. அது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை சென்றது வரை அப்பப்பா சொல்லி மாளாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


உடல் உறுப்பு தானம் செய்த மீனா:


சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார் மீனா. இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. என் கணவர் வித்யாசாகருக்கு யாராவது  உறுப்புகள் தானம் செய்ய முன்வந்து இருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டு வாழ்க்கையே மாறியிருக்கும். இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டுள்ளேன். அதனால் எனது உடல் உறுப்புகளையும் நான் தானம் செய்கிறேன் என மீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.