தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்களில் பலர் தங்களது தொடக்க காலங்களில் மிகவும் சிரமப்பட்டவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் பொதுவெளியில் சொல்ல முடியாத அல்லது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பல இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்தவர்கள்தான். பலர் தங்களது இன்னல்களை வெளியில் சொல்லியுள்ளனர். பலர் வெளியில் சொன்னது இல்லை. இப்படியான நிலையில், தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமாகி உள்ளவர் டபுள் டக்கர் படத்தின் இயக்குநர் மீரா மஹதி.


தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் தனது குறும்படங்கள் மூலம் திறமையை வெளிக்காட்டி வெள்ளித் திரை இயக்குநராக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். சமீபத்தில் டபுள் டக்கர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய மீரா மஹதி தான் எதிர்கொண்ட இன்னல்கள் குறித்தும், தனக்கு கிடைத்த ஊக்கங்கள் குறித்தும் பேசினார்.


அதாவது, “ யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். எனது குறும்படங்களைப் பார்த்த நண்பர்கள் பலரும் என்னை தொடர்ந்து ஊக்குவித்ததுதான் டபுள் டக்கர் படத்தை இயக்கும் அளவிற்கு வந்துள்ளேன். சினிமா இயக்க முடிவு செய்தபோது நடிகர்களைச் சந்துத்து கதை சொல்ல தீர்மானித்தேன். என்னால் விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்களை நெருங்கக் கூட முடியாது எனத் தெரியும். வளர்ந்துவரும் நாயகர்கள் சிலரிடம் கதை சொல்ல முயன்றேன். அவர்கள் யாரும் குறைந்தபட்ச மரியாதையைக் கூட கொடுக்கவில்லை.  சக மனிதனுக்கு கொடுக்கும் மரியாதை கூட அவர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கவில்லை.


ஆனால் நான் அவர்களிடம் கேட்டது 5 நிமிடம் மட்டும்தான். ஆனால் அவர்கள் கொடுக்க முன்வரவில்லை.  அதன் பின்னர்தான் மைம் கோபி சார் தீரஜிடம் அறிமுகம் செய்து வைத்தார். திரஜ் 5 நிமிடத்தில் என்னை இம்ப்ரஸ் செய்ய முடியுமா? என்று கேட்டார். கதை சொல்லத் துவங்கினேன். தீரஜிடம் கதை சொல்லி முடிக்கும்போது ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.  இந்த படத்தை நாங்கள் ஆரம்பிக்கும் போது சிறிய படமாகத்தான் இருந்தது.


படத்தில், வரும் அனிமேஷன் பகுதிகளை ஏற்கெனவே மனதில் காட்சிப் படுத்திவிட்டேன்.  கதையைக் கேட்ட பின்னர் தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். இதுமட்டும் இல்லாமல் துணை நடிகர்களான கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் இணைந்தது படத்தின் பஜ்ஜெட்டை இன்னும் அதிகமாகிவிட்டது. 


தமிழ் சினிமாவில் டபுள் டக்கர் திரைப்படம் படம் முழுவதும் இரண்டு அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் வருகின்றது. இந்திய சினிமாவிலேயே அனிமேஷன் கதாப்பாத்திரங்கள் படம் முழுக்க வரும் முதல் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை  ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது. காமெடியை மையப்படுத்திய ஆக்‌ஷன் படமான இப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.