‘டான்’ படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியான ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர். கோவை அருகில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் அமைந்திருக்கும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர் அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளார்.


தொடர்ந்து அட்லீ இயக்கிய `மெர்சல்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு நடிக்கவும் செய்திருக்கிறார். அப்போது விஜய் உடன், அவர் எடுத்த புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது. அதை வைத்து, விஜய் உடன், சிபி சக்கரவர்த்தி இணையப் போகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது. 



இதற்கு முன், சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்’ படத்தை நெல்சன் இயக்கினார். அவருக்குத் தொடர்ந்து அடுத்த வாய்ப்பாக விஜய்யின் `பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல, தற்போது சிவகார்த்திகேயனின் `டான்’ படத்தை இயக்கியுள்ள சிபி சக்கரவர்த்தியும் விஜய்யுடன் இணைவார் என்று பேசப்பட்டு வருகிறது.






சிபி சக்கரவர்த்தி இயக்கிய `சாலையின் சகதியில்’ குறும்படம் பல்வேறு விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 


லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் `டான்’ படத்தில், `டாக்டர்’ படத்தில் அவரோடு ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். முன்னதாக படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து RRR படம் கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானதால்  ‘டான்’ படம் மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 



வசூலில் வெற்றி பெற்றதாக `டான்’ திரைப்படம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் மேக்கிங் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `டான்’ திரைப்படம், வரும் ஜூன் 10 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.