இந்திய சினிமாவை கடந்தும் சர்வதேச அளவில் ஒலிக்கப்படும் ஒரு பெயர் எஸ்.எஸ். ராஜமௌலி. பிரமாண்டத்தை தனது படங்களில் மட்டுமே காட்டாமல் வெற்றியிலும் அதை நிரூபித்த கலைஞன். இவருடன் சேர்த்து ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா உலகையுமே சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க செய்தவர்.
விருதுகளை குவித்த ஆர்.ஆர்.ஆர் :
தற்போது எஸ்.எஸ். ராஜமௌலி தனது திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அதன் சிறப்பான திரைக்கதைக்காக மட்டுமின்றி சிறந்த நடிப்பிற்காகவும் ஏராளமான விருதுகளை சர்வதேச அளவில் கைப்பற்றியதோடு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதையும் வென்று சாதனை படைத்தது.
டாக்குமென்டரியாக உருவாகுவும் ராஜமௌலியின் பயணம் :
அந்த வகையில் உலகமெங்கிலும் கொண்டாடப்படும் ஒரு திரைப்பட இயக்குனராக திகழும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விரைவில் அவர் பற்றின ஒரு டாக்குமென்டரி திரைப்படம் உருவாக உள்ளது எனும் தகவல் சினிமா வட்டாரங்கள் மூலம் அறியப்படுகிறது. தயாரிப்பாளர் ராகவ் கண்ணாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ரிவர்லேண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த டாக்குமென்டரி படத்தை தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
முழுமையான பான் இந்திய படங்கள் :
எஸ்.எஸ். ராஜமௌலி பல வகையிலும் இந்தியாவை உலக வரைபடத்தில் முன்னிலை படுத்தியுள்ளார். அவரின் பல படங்கள் மொழி, ரீஜனல் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பான் இந்திய திரைப்படங்கள் என்பதை நிரூபித்துள்ளன. இந்த மரியாதைக்குரிய இயக்குனருக்கு நன்றி தெரிவித்து அவரின் திரையுலக பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது இந்த டாக்குமென்டரி திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
பணிகள் தொடங்கின :
மேலும் இந்த டாக்குமென்டரி படத்திற்கான பணிகள் இந்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்.எஸ். ராஜமௌலி அவரின் படப்பிடிப்பு சார்ந்த பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பதாலும் அவரால் அவரின் பணிகளை உடனே முடிக்க முடியாத காரணத்தாலும் ஒரு சில மாதங்கள் அவருடன் தொடர்பில் இருந்து அவரை பற்றின தகவல்களை சேகரித்த பின்னர் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவரின் வாழ்க்கையை நெருக்கமாக கொண்டு செல்வதற்கான முயற்சிகள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த படத்திற்கு தயார் :
2001ம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர் 1' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து அட்வென்ச்சர் படம் ஒன்றில் களம் இறங்க உள்ளார் என்ற தகவலை டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2022ல் தெரிவித்தார். ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் போன்றவர்களின் படங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் ராஜமௌலி. இந்த தகவல் அவரின் ரசிகர்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் இப்போதில் இருந்தே தூண்டியுள்ளது.