நடிகர் ரஜினிகாந்தின் நன்மதிப்பை குலைக்க வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி சுதாகர் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நன்மதிப்பு :
தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர்.
இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள்.
தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உதவுவதில் மட்டுமல்ல, பாராட்டுவதிலும் பரந்த மனம் கொண்டவர். அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை போலவே மற்ற மொழிகளில் வெளியான திரைப்படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று அமோகமான வரவேற்பை பெற்றது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள 'காந்தாரா' படத்தை ரஜினிகாந்த் தொடங்கி அனைத்து மொழி திரைத்துறையினரும் பாராட்டி இயக்குனர் ரிஷப் ஷெட்டியை புகழ்ந்து தள்ளினார். புகழின் உச்சிக்கு சென்ற ரிஷப் ஷெட்டியை இந்த உலகமே கொண்டாடி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் காந்தாரா திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதற்கு ட்வீட் மூலம் பதில் அளித்த ரிஷப் ஷெட்டி பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் மீது மிகுந்த மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்ட ரசிகர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் நடையை போல இமிடேட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இயக்குநருக்கு வாழ்த்து
லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இயக்குநரே, கதாநாயகனாக நடித்துள்ளார். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையை விட வார நாட்களில் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது என்றும், இந்த படம் வசூல் ரீதியாக புது சாதனையை படைக்கபோகிறது என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பாலும், அறிமுக ஹீரோக்களுக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைப்பது மிக மிக அரிதான விஷயமாக சினிமாவில் பார்க்கப்படும் நிலையில், இந்தக் கருத்தை, பிரதீப் “லவ் டுடே” படம் மூலம் சுக்கு நூறாக உடைத்துள்ளார்.
லவ் டுடே படம் வசூல் வேட்டை புரிந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரதீப் ரங்கநாதன் சந்தித்துள்ளார். ரஜினியை சந்தித்து போட்டோவை எடுத்த பிரதீப், அதை அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், “ இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். சூரியனின் பக்கத்தில் உள்ளது போல் இதமாக இருந்தது. அழுத்தமான அரவணைப்பும், அந்த கண்களும், அந்த சிரிப்பும் , அந்த ஸ்டைலும், அன்பும் ... என்ன ஒரு மனுஷன்... சூப்பர் ஸ்டார் ரஜினி லவ் டுடே படத்தை பார்த்து என்னிடம் வாழ்த்து தெரிவித்தார். நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன் சார்.” என்று பதிவிட்டுள்ளார்.