டிஸ்கோ சாந்தி, நடிகை சில்க் ஸ்மித்தாவுக்கு இணையாக கவர்ச்சி நடிகைகள் உலகில் தனக்கென தடம் பதித்தவர். டிஸ்கோ பாடல்களுக்கு குத்தாட்டம் போடுபவராகத் தான் நமக்கு அவரைத் தெரியும். ஆனால் அவர் வாழ்க்கைக்கு பின்னால் நிறைய வேதனைகள் இருந்துள்ளன. 


பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்று யாழ் இசைத்துப் பாடிய சி.எல்.ஆனந்தனின் மகள் தான் டிஸ்கோ சாந்தி. வீட்டில் அவருடன் சேர்த்து 10 பிள்ளைகள். ஆனந்தன் சினிமாவில் நன்றாக சம்பாதித்தார். ஆனால் அவரை அவரது உறவினர்கள் ஏமாற்றினார்கள். அவரது சொத்துக்கள் பறிபோன நேரம் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. திடீரென ஆனந்தன் உயிரிழக்க குடும்பம் வீதிக்கு வந்தது. தனியார் பள்ளிக்கு ப்ளைமவுத் காரில் சென்ற சாந்தி, மாநகராட்சிப் பள்ளிக்குச் செல்லலாகினார். அவருக்கு படிப்பில் அலாதி பிரியம். வகுப்பில் அவர் தான் முதல் மாணவி ஆனால் குடும்ப வறுமையால் அவர் நடிப்பில் தள்ளப்பட்டார்.


முதல் படமே மோகன் லாலுடன் அமைந்தது. அமெரிக்கா என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாக 3 வருடங்கள் ஆகிவிட்டது. சினிமாவில் கதாநாயகியாகத் தான் நடிக்க விரும்பினார் சாந்தி. ஆனால் வந்ததெல்லாம் கவர்ச்சி வாய்ப்புகள். ஊமை விழிகள் படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில் பாடலில் அவர் போட்ட ஆட்டம் பலரையும் கவர்ந்தது. ஆனால் குடும்பத்துடன் சென்று அவரது படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவரே முகம் சுளித்து வேதனைப்பட்டுள்ளார். அதன் பின்னர் குடும்பத்துடன் அவர் அவருடைய படத்தைப் பார்த்ததே இல்லையாம். இதை அவரே தனது பேட்டியில் கூறியிருக்கிறார். தனக்கு கவர்ச்சி நாயகி வாய்ப்பு பிடிக்கவில்லை என்றாலும் என் உடன் பிறந்தவர்களின் நலன் கருதி ஏற்றுக் கொண்டுள்ளார். நடனம் ஆட வராமல் அசிங்கப்பட்ட சாந்தி, ரகுராம் மாஸ்டரிடம் நடனத்தைக் கற்றார். அதன்பின்னர் அவருக்கு தமிழிலும், தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது. டிஸ்கோ சாந்தி கால் ஷீட்டுக்காக இயக்குநர்கள் காத்திருக்கும் சூழல் உருவானது. அப்போதுதான் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி டிஸ்கோ சாந்தியிடம் காதலைச் சொன்னார்.




ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத சாந்தி பின்னர் அவரின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாகச் சென்றது. அப்போது இவர்களின் இளைய மகள் அக்‌ஷரா உடல்நலக் குறைவால் உயிரிழக்க அது இந்தத் தம்பதியை வெகுவாகவே பாதித்தது. ஸ்ரீஹரி வில்லன் ரோல், கேரக்டர் ரோல் என்று நன்றாக சம்பாதித்தார். டிஸ்கோ சாந்தி நடிப்பை விட்டுவிட்டு குடும்பத்தில் ஐக்கியமானார். மகள் மரணத்திலிருந்து மீண்ட அவருக்கு ஸ்ரீஹரி மரணம் இன்னொரு இடியாக வந்தது.


டிஸ்கோ சாந்தியும் ஸ்ரீஹரியும் மும்பைக்கு சென்றிருந்தனர். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கவே ஸ்ரீஹரியை பிரபல மருத்துவமனையில் சேர்த்தார் டிஸ்கோ சாந்தி. கண் விழித்து நலமடைந்த ஸ்ரீஹரி டிஸ்சார்ஜுக்கு தயாரான போது மருத்துவர்கள் ஒரு ஊசி போட்டுள்ளனர். உடனே சரிந்து விழுந்த ஸ்ரீஹரி துடிதுடித்து இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த டிஸ்கோ சாந்தி கூச்சலிட அவருடைய உறவினர்கள் மருத்துவமனையுடன் தகராறில்  இறங்கினர். மருத்துவமனை இழப்பீடு தர முன்வந்தும் வேண்டாம் எனக் கூறி உடலைப் பெற்று வந்து தனது மகளின் சமாதிக்கு அருகேயே அடக்கம் செய்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.


டிஸ்கோ சாந்தியின் மகன்கள் இருவரும் சினிமாவில் தான் இருக்கிறார்கள். மகளின் பெயரில் ஆரம்பித்த தொண்டு நிறுவனம் வாயிலாக தன்னால் இயன்ற உதவியை சாந்தி செய்து வருகிறார்.


சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் விஜய், அஜித், சூர்யா என இக்கால நடிகர்களுடன் ஆட வேண்டும் என்று துள்ளலுடன் கூறுகிறார் டிஸ்கோ சாந்தி.