ஆக்சன் திரைபடத்தில் வருவது போல பரபரப்பான துரத்தல் காட்சியில் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வியாழக்கிழமை இரவு புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையில் கொள்ளையர்கள் நான்கு பேர் வாகனங்களில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு காரை துரத்திச் சென்று இருவரிடமிருந்து ரூ. 3 கோடியே 60 லட்சம் கொள்ளையடித்துள்ளனர்.
பவேஷ் குமார் படேல் மற்றும் விஜய்பாய் ஆகிய இருவர் ஏன் இவ்வளவு பெரிய தொகையை காரில் கொண்டு சென்றனர் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த தொகை ஹவாலா மோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், கொள்ளையர்கள் முதலில் ஒரு வேகத்தடை அருகே காரின் வேகத்தை குறைத்து பாதிக்கப்பட்டவர்களின் காரை நிறுத்த முயன்றனர்.
அடையாளம் தெரியாத நான்கு பேர் இரும்பு கம்பிகளை ஏந்தியபடி அவர்களது காரை நெருங்கி வந்தனர். அதன்பிறகு, கொள்ளையர்கள் இரு கார்கள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களில் அவர்களை துரத்தத் தொடங்கினர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவர்களது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு காரை நிறுத்தினர். கொள்ளையர்கள் தாக்கப்பட்டவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு காரில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இது தொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வருவது போன்று, காரில் துரத்தி சென்று பணத்தை கொள்ளையடித்த சம்பவம் புனே முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக, ஹாலிவுட் திரைப்படங்களில்தான் இதுபோன்ற விறுவிறுப்பான சம்பவங்கள் அடங்கிய காட்சி அமையும். ஆனால், உண்மையாகவே நடந்த இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.