கொரோனா லாக்டவுனில் தான் இயக்கிய ஹ்ரிதயம் படத்துக்கு ஓடிடி தளங்கள் திரையரங்குகளைக் காட்டிலும் மூன்று மடங்கு விலை கொடுத்ததாக இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.


மலையாளப் படங்களை திரையிட மறுத்த பிவிஆர் சினிமாஸ் 


கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், மல்டிப்ளக்ஸ் திரையரங்க நிறுவனமான பிவிஆருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் மலையாளத் திரைப்படங்களை தங்கள் நிர்வாகத்தின் கீழ் வரும் திரையரங்குகளில் வெளியிட மறுத்துள்ளது அந்த நிறுவனம்.


சமீபத்தில் வெளியேன ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் உள்ளிட்ட படங்களை வெளியிட மறுத்ததுடன், ஏற்கெனவே திரையரங்களில் ஓடிக் கொண்டிருந்த ஆடு ஜீவிதம் படத்தையும் நீக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரூ.100 கோடி வசூல் ஈட்டிய பிரேமலு மற்று மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய இரு படங்களும் பிவிஆர் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டன. 


இதனால் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்று ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிவிஆர் நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் கேரள திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


குரல் எழுப்பிய ஹ்ரிதயம் பட இயக்குநர்






கேரள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களைத் தொடர்ந்து மலையாளத் திரைப்பட இயக்குநர்களும் தங்கள் சார்பில் குரல் எழுப்பியுள்ளார்கள். ஆடு ஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி பிவிஆர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவரும் வருஷங்களுக்கு சேஷம்'. 2022ஆம் ஆண்டு ஹ்ரிதயம் படத்தை இயக்கிய வினீத் ஸ்ரீனிவாசன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் இடையே இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 


வருஷங்களுக்கு சேஷம் படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்த போதிலும் இந்தப் படத்தை திரையிட மறுத்துவிட்டது பி.விஆர் நிறுவனம். இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வினீத் ஸ்ரீனிவாசன்  “கொரோனா இறுதிக்கட்டத்தில் ஞாயிற்றுகிழமை லாக்டவுனில் ஹ்ரிதயம் படம் வெளியாக இருந்தது. இன்று எங்கள் படங்களை திரையிட மறுத்த எல்லா திரையரங்க நிறுவனங்களும் எங்கள் படத்தை அப்போது தங்கள் திரையரங்கில் வெளியிட எங்களிடம் கெஞ்சினார்கள்.


அதே நேரம் ஓடிடி தளங்கள் எங்கள் படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ள தயாராக இருந்தார்கள்.  ஹ்ரிதயம் படத்தை நாங்கள் திரையரங்கத்தில் வெளியிட்டோம். திரையரங்கத்தில் எங்களுக்கு கிடைத்த லாபத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ஓடிடி தளம் எங்கள் படத்திற்கு கொடுத்தது ஆனால் திரையரங்களின் பக்கமே நாங்கள் நின்று எங்கள் ஆதரவைத் தெரிவித்தோம். ஆனால் இன்று நாட்டில் எல்லா இடங்களில் இருந்து மலையாளத் திரைப்படங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சீக்கிரம் ஒரு தீர்வை காண வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்