பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்கள்


தமிழில் ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த அத்தனைபேரும் இன்று தங்களுக்கென தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறார்கள் என்றால் அது இயக்குநர் பாலுமகேந்திராதான்.  வெற்றிமாறன்  , ராம் , துரை செந்தில் குமார், பாலா, விக்ரம் சுகுமாரன் , சீனு ராமசாமி என அத்தனை பேரும் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்கள். ஒவ்வொருவரும்  தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு இடத்தை தங்களுக்கெனெ உருவாக்கி இருக்கிறார்கள். வெற்றிமாறனின் படங்கள் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கின்றன என்றால் ராம் படங்களுக்கு இன்னொரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.


துரை செந்தில் குமார் இயக்கும் கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களுக்கும், பாலா இயக்கும் விளிம்புநிலை மக்களின் கதைகளுக்கும் வேறு ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சீனு ராமசாமி காட்டும் கிராமத்து உலகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


விகடனில் தொடராக எழுதிய மைல்ஸ் டூ கோ புத்தகத்தில் உதவி இயக்குநராக இவர்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல்கள் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் தலையாய சீடனாக இருந்தவர் வெற்றிமாறன் . அப்படியான வெற்றிமாறனை பார்க்கும்போது எல்லாம் தனக்கு ஏற்பட்ட எரிச்சலும் அதற்கு பின் இருந்த காரணத்தையும் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.


வெற்றிமாறன் பற்றி விக்ரம் சுகுமாரன்


ஆடுகளம் படத்தின் கதையை வெற்றிமாறன் வடசென்னையை மையப்படுத்தி எழுதியிருந்தார். ஆனால் வட சென்னையில் சேவல் சண்டை என்பது அவ்வளவு பிரபலமான ஒரு விளையாட்டு கிடையாது என்பதால் இந்த கதையை அப்படியே மதுரைக்கு மாற்றினார். மதுரை நிலப்பரப்பை நன்றாக தெரிந்து வைத்த விக்ரம் சுகுமாரன் ஆடுகளம் படத்திற்கு வசனம் எழுதினார். அவரது வசனங்கள் இந்தப் படத்தில் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் தயாரிப்பில் மதயானைக் கூட்டம் படத்தை இயக்கி வெற்றிகண்டார் விக்ரம் சுகுமாரன். கடந்த ஆண்டு சாந்தனு இயக்கத்தில் அவர் இயக்கிய ராவண கோட்டம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. நேர்காணல் ஒன்றில் தான் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்ந்த கதையை விளக்கினார் விக்ரம் சுகுமாரன் அதில் அவர் இப்படி கூறினார் 


“பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர்வது எல்லாம் அவ்வளவு எளிதானது கிடையாது என்று எல்லாரும் என்னிடம் சொன்னார்கள். எப்படியாவது அவரது அலுவலகத்தில் அவரை சந்தித்து உதவி இயக்குநராக ஆகிவிடலாம் என்று தினமும் அவர் அலுவலகத்திற்கு செல்வேன். ஆனால் அவரை சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு வெற்றிமாறனை கடந்துதான் செல்ல வேண்டும் . அலுவலகத்திற்கு சென்றால் எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான் அவர்கிட்ட சொல்லிடுறேன் “ என்று திருப்பி அனுப்பி விடுவார்.


அப்போதெல்லாம் வெற்றிமாறனை பார்த்தாலே எனக்கு கடுப்பாகும். பிறகு பாலுமகேந்திரா காலையில் அலுவலகம் வரும் நேரத்திற்கு, சாலிகிராமத்தில் சென்று அவர் வரும் வழியில் காத்திருந்தேன். பின் அவரை பார்த்து பேசி சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். எனக்கும் உதவியாக இரு, நீயும் கற்றுக்கொள் என்று சொல்லி என்னை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார்” என்று விக்ரம் சுகுமாரன் கூறியுள்ளார்