பிரபல இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய முக்கோண காதல் காமெடி திரைப்படமான `காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் மிக முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சமீபத்தில் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 


இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் டைட்டானிக், சத்யா, பாகுபலி முதலான திரைப்படங்களின் பிரபலமான காதல் ஷாட்களை இரண்டு பெண்களை வைத்து தனது கதைக்கேற்ப மாற்றி உருவாக்கியுள்ளார். அதில் `டைட்டானிக்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற `ஐ ஏன் ஃப்ளையிங்’ காட்சியை உருவாக்கியுள்ளார். அந்தக் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், `ஒரு ஜாக், இரண்டு ரோஸ் என நான் `டைட்டானிக்’ திரைப்படத்தை உருவாக்கிய போது’ எனக் குறிப்பிட்டு, ரசிகர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் `டைட்டானிக்’ திரைப்பட கெட்டப்பில் இருப்பது காட்டப்பட்டுள்ளது. 






இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த வீடியோவைக் கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 22 தேதியில் ‘22.02.2022’ என்று அனைத்து எண்களும் இரண்டாகவே இருப்பதால் அதனை சிறப்பிக்கும் விதமாக இந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும் அவர் நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கவுள்ள நிலையில், அதன் பாடல்களையும், பின்னணி இசையை அமைத்துள்ளார் அனிருத். 


வரும் ஏப்ரல் 28 அன்று `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.