இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பெற்றோர்கள் காவல்துறையை சேர்ந்த நிலையில், நடிகராகும் ஆசையில் சிவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரீ ஆனார் விக்னேஷ் சிவன். ஆனால் காலம் அவரை இயக்குநராக்கி அழகு பார்த்தது. சிம்பு, வரலட்சுமி நடித்த “போடா போடி” படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றார். விஜய்யின் துப்பாக்கிக்கு எதிராக ரிலீசான போதும் கலவையான விமர்சனங்களையே அப்படம் பெற்றது.
தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் சின்ன கேரக்டரில் வந்த விக்னேஷ் சிவன், அதன் மூலம் தனுஷூடன் ஏற்பட்ட நட்பின் மூலம், அவரின் வுண்டர்பார் பிலிம்ஸ் கீழ் “நானும் ரௌடி தான்” படத்தை எடுத்தார்.விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இப்படமே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த இடமாகவும் அமைந்தது.
அடுத்ததாக சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகளில் ஒரு எபிசோடு, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய 5 படங்களை மட்டுமே இந்த 10 வருடத்தில் இயக்கியுள்ளார். அதேசமயம் பாடலாசிரியராக வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, ரெமோ, கோலமாவு கோகிலா, இரும்புத்திரை, நம்ம வீட்டு பிள்ளை, வலிமை, தானா சேர்ந்த கூட்டம், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார்.
இதற்கிடையில் 7 வருட காதலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக, நயன்தாராவை இந்தாண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின் பல இடங்களுக்கு டூர் சென்ற இந்த ஜோடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு தங்களது ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் மனைவி நயன்தாராவுடன் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் அனைவரும் அவர் என்ன சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், துபாயில் உள்ள பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே தனது பிறந்தநாளை நயன்தாரா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், அன்பான குடும்பத்தினரோடு பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் மனைவியால் கிடைத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான உறவுகளோடு நடந்த ஒரு கனவு பிறந்தநாள். இதை விட சிறப்பாகவும் சிறப்பாகவும் பெற முடியாது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் எனக்குக் கொடுக்கும் அனைத்து அழகான தருணங்களுக்கும் எப்போதும் கடவுளுக்கு நன்றி! என தெரிவித்துள்ளார்.