விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் அடுத்தபடியாக விஜய்யுடன் வெற்றிமாறன் (Vetrimaaran) இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


விஜய் அரசியல் வருகை


 நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை கைவிட்டு அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி விஜய் தனது “தமிழக வெற்றி கழகம்” என்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார். தற்போது தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டுமே நடித்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தனது சினிமா கரியரின் உச்சத்தில் இருக்கும் விஜய் இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளது மிகவும் துணிச்சலான ஒரு செயல் என்று அவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள். 


தளபதி 69


தற்போது  விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சினேகா, பிரேம்ஜி, பிரஷாந்த், பிரபுதேவா, மீனாக்‌ஷி செளத்ரி, லைலா, மோகன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


கோட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயின் 69ஆவது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக  முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இப்படம் விஜய் நடிக்கும் கடைசி படமாக இருக்கலாம் என்பதால் இப்படத்தை விஜய் யாரிடம் கொடுக்கப் போகிறார் என்பது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.


எச் வினோத்


சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் கமலுடன் இயக்க இருந்த KH233 படம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹெச். வினோத் விஜய்யின் 69ஆவது படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சமூக அரசியல் கலந்த கமர்ஷியலான படங்களை இயக்கி வரும் ஹெச்.வினோத் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பக்கபலமாக அமையும் வகையிலான ஒரு படத்தை எடுக்கலாம்.


கார்த்திக் சுப்பராஜ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு தான் முன்பாகவே கதை சொல்லியிருப்பதாகவும் அந்தக் கதை விஜய்க்கு புரியவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படம்போன்று விஜய்யின் ஃபேன் பாயாக ஒரு படத்தை எடுக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.


வெற்றிமாறன்


முந்தைய இரண்டு இயக்குநர்களைக் காட்டிலும் ரசிகர்கள் அதிகம் பார்க்க ஆசைப்படும் ஒரு கூட்டணி வெற்றிமாறன் - விஜய் தான். தமிழ் சினிமாவின் களத்தை மாற்றியவர் வெற்றிமாறன். ஏற்கெனவே நடிகர் விஜய்க்கு ஒரு முறை வெற்றிமாறன் கதை சொல்லியிருப்பதாகவும் விவாதங்கள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் முடித்துள்ளார். சூர்யாவுடனான வாடிவாசல் படம் தற்போதைய நிலைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை சேர்த்து பார்க்கையில் விஜய்யின் படத்தை இயக்குவதற்கு வெற்றிமாறனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.