நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரஜிஷா விஜயன். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய நிலையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்துக்காக 2016ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 2019 ஆம் ஆண்டு வெளியான ஜூன் படம் ரஜிஷாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இவரை 2021 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அழைத்து வந்தார். அதன்பின்னர் ஜெய்பீம், சர்தார் என சில படங்களில் மட்டுமே ரஜிஷா நடித்துள்ளார். அதேசமயம் ராமாராவ் ஆன் டூட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் ரஜிஷா அறிமுகமாகியுள்ளார். 3 மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வரும் நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை தான் ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறார். இதுவரை வெளியே தெரியாமல் வைத்திருந்த இந்த விஷயத்தை முதல் முறையாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரஜிஷா உறுதிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் ஜோடியாக இருக்கின்றனர். மேலும் அந்த பதிவில், ‘1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்து கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Lal Salaam: மும்மதமும் முதல் மதம் தான் .. ரஜினிகாந்த் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்!