வெற்றிமாறன்


பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். ஆடுகள் படத்தில் ஆறு தேசிய விருதுகள் , விசாரணை படத்தில் வெனிஸ் விருது,  வடசென்னை, அசுரன் , தற்போது விடுதலை என தமிழ் சினிமாவின் அடையாளத்தை மாற்றியவர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். ஒரு இயக்குநர் தனது படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் வெற்றிமாறன். 


The Most Personal Is The Most Universal என்று வெற்றிமாறன் அடிக்கடி பயன்படுத்தும் வாசகமாகட்டும்... ஆனந்த விகடனில் தனது அனுபவங்களை எழுதிய மைல்ஸ் டூ கோ தொடராகட்டும்.. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வெற்றிமாறன் நடுவராக இருந்தபோது இளம் போட்டியாளர்களுக்கு அவர் சொன்ன அறிவுரைகள் எல்லாம் இளம் இயக்குநர்களுக்கு மனப்பாடமாக தெரியும். ஆனால் அப்படியான வெற்றிமாறனுக்கு அவரது அப்பா கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா. இதுகுறித்து அவர் பேசியுள்ள பழைய காணொளி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


பாஸ் ஆகுறது முக்கியம் இல்ல..






 ’நான் 7 ஆவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பரீட்சையில் காப்பியடித்து மாட்டிக் கொண்டேன். அப்போது என்னுடைய அப்பா சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சென்னையில் வேலை முடித்து ராணிப்பேட்டைக்கு அவர் திரும்பி வர நள்ளிரவு ஆகிவிடும். நான் காப்பியடித்தது என் வீட்டில் என் அம்மாவிற்கும் அக்காவிற்கும் தெரிந்துவிட்டது. ஆனால் நாம் அம்மாவையும் அக்காவையும் நான் காப்பியடிக்கவில்லை.. பக்கத்தில் இருந்தவன் தான் என்னைப் பார்த்து எழுதினான், என்று நம்பவைத்துவிட்டேன். ஆனால் என்னுடைய அப்பா வந்த உடனே நான் காப்பியடித்து எழுதியதை கண்டுபிடித்துவிட்டார். இரவு 2 மணிக்கு என்னை அவர் எழுப்பினார். நான் பயத்தில் தூங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தேன். பின் என்னை அவர் எழுப்பி, படிப்பது பாஸ் ஆவதற்கு மட்டுமில்லை கற்றுக்கொள்வதற்குத் தான் . உனக்கு ஒரு விஷயம் தெரியாமல் நீ அதில் பாஸ் ஆகவேண்டிய அவசியம் இல்லை. பாஸ் ஆவது நமது நோக்கம் இல்லை கற்றுக்கொள்வதுதான் நம் நோக்கம் என்று அவர் சொன்னார். அவர் அப்போது சொன்ன வார்த்தை என் மனதில் அப்படியே தங்கிவிட்டது” என்று வெற்றிமாறன் இந்த காணொளியில் பேசியுள்ளார்.


விஜயை இயக்குகிறாரா வெற்றிமாறன்


விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள வெற்றிமாறன் அடுத்ததாக எந்த படத்தை இயக்கப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். வெற்றிமாறன் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் அவரது கடைசி படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது