தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களுள் ஒருவர் வெற்றிமாறன். தற்போது சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை எடுத்து வருகிறார். நடிகர் தனுஷை வைத்து அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் தற்போது தனது வாழ்க்கை முறை , உணவு என அனைத்திலும் இயற்கையை சார்ந்து செயல்பட தொடங்கியிருக்கிறார். சென்னைக்கு வெளியே , வயல்வெளியுடன் கூடிய வீட்டை வாங்கியுள்ள அவர். அங்கு தனக்கு தேவையான உணவுப்பொருட்களை விவசாயம் செய்து வருகிறார். அது மட்டுமல்ல ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்த தான் , அதிலிருந்து வர என்னவெல்லாம் செய்தேன் என்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.







அதில் “நான் பயங்கரமா ஸ்மோக் பண்ணுவேன். பொல்லாதவன் படம் முடியும் சமயங்களில் எல்லாம் ஒரு நாளைக்கு 80 சிகரெட்டுகள் பிடிப்பேன். தீவிரமா புகைப்பிடிப்பேன். எப்போவெல்லாம் புகைப்பிடிக்கிறோனோ அப்போதெல்லா டீ குடிப்பேன். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவேன். அதுவும் எப்போதாவதுதான் சாப்பிடுவேன். பிஸ்கெட் இல்லைனா இரண்டு வாழைப்பழம் போதுமானது. 20 வருடங்களா இப்படி புகைப்புடித்தால் என்ன ஆகும், உடம்பு தாங்காதில்லையா ...2008 நவம்பர் 14 ஆம் தேதி அன்றைக்கு புகைப்பிடிக்க கூடாதுனு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து இன்று வரை புகைப்பிடிப்பதே இல்லை. கொஞ்ச நாள்  உடற்பயிற்சி பண்ணேன். ஆரோக்கியமான உணவு சாப்பிட்டேன். அதன் பிறகு உடற்பயிற்சியை விட்டுட்டு யோகா பண்ணினேன். கொஞ்ச நாளா கீட்டோ டயட் இருந்தேன். புகைப்பிடிக்குறதை நிறுத்தனுமா முதல்ல இரண்டு விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அது முன்னால நாம பலவீனமா இருக்கோம்னு தெரிஞ்சுக்கனும். அது கூட விளையாட கூடாது. உதாரணத்துக்கு நான் தம் அடிக்குறத நிறுத்திட்டேன் அப்படினு அதை அப்படியே பார்த்துக்கிட்டே இருக்க கூடாது. இரண்டாவது நிக்கோடின் புகைப்பதை நிறுத்திட்டா வாழ்க்கை முறையில மாற்றம் வேண்டும்.  ஏன்னா அது நமக்கு அதிக தூக்கத்தை ஏற்படுத்தும். தூக்கம் வந்து தூங்க முடியலைனா.. அது நமக்கு கோபத்தை ஏற்படுத்தும். அது மற்றவர்களை பாதிக்கும். 10 வருடங்களுக்கு நீங்க புகைப்பிடிக்குறதை நிறுத்தினால்தான் non smoker ஆக மாறுவீங்க. அதுவரைக்கும் நீங்க ஒரு ஸ்மோக்கர் ஆனா தற்காலிகமாக புகைப்பிடிக்கலைனு அர்த்தம்.” என தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் வெற்றி மாறன்.