நீயா நானா 


விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கடந்த 17 ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி  வருகிறார். சமூகத்தில் வெளிப்படும் பல்வேறு கருத்துகள், முரண்பாடுகளைப் பற்றிய ஒரு அடிப்படையான விவாதத்தை இந்த நிகழ்ச்சி தொடங்கி வைத்திருக்கிறது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த தரப்புகளுக்கு இடையில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒரு பொதுமான தளத்திற்கு உரையாடலை நகர்த்திச் செல்பவர் கோபிநாத்


சமீப காலங்களில் பொதுமக்கள் மத்தியில அதிக கவனம் பெற்றவர் கோபிநாத். ஒவ்வொரு நிகழ்ச்சியில் இவர் தனது நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கையாளும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது, ஒருவர்  தவறான அல்லது  பிறருக்கு ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு கருத்தை தெரிவிக்கிறார் என்றால் அவரை பெரிய அளவில் புண்படுத்தாமல் அவருக்கு புரியும் வகையில் கோபிநாத் கையாளும் முறைகள் பாராட்டுக்களைப் பெறுகின்றன. மேலும் ஒரு அளவிற்கு மேல் பொறுமை இழந்தால் கோபிநாத்திடம் வெளிப்படும் கோபமும் தேவையான ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.


கோபிநாத்தை பாராட்டிய வெற்றிமாறன்


  நீயா நானா நிகழ்ச்சியில் புதிய முயற்சியாக கடந்த சில ஆண்டுகளாக நீயா நானா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக அக்கறைக் கொண்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுக்கான நீயா நானா விருதுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவர் கலந்துகொண்டுள்ளார்கள்.






இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள வெற்றிமாறன் “ஒரே நேரத்தில் சீரீயஸான விஷயங்களையும் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியும் பேசுகிறீர்கள். பார்க்க ரொம்ப நல்லா இருக்கு” என்று கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜிடம் கோபிநாத் “இயக்குநர் ஆன பிறகு உங்க அப்பாவை எங்கு கம்பீரமாக உட்கார வைத்தீர்கள் என்று கேட்டபோது “முன்பெல்லாம் சாமி ஆடும்போது அப்பா பதற்றமாக இருப்பார் இப்போ எல்லாம் ரொம்ப கம்பீரமாக சாமி அடுகிறார்” என்று மாரி செல்வராஜ் பதிலளித்தார்.


சமூகத்தில் சாதி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தனது படைப்புகளின் வழி மாரி செல்வராஜ் உரையாட நினைப்பது அவரிடம் ரொம்ப பிடித்த ஒன்று என்று இயக்குநர் வெற்றிமாறன் இந்த ப்ரோமோவில் கூறியுள்ளார்.