இளையராஜா பயோபிக் படம் தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார். 


இளையராஜா வாழ்க்கை வரலாறு:


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தொடர்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். ராஜா பாட்டுக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்னும் அளவுக்கு இசை என்றால் இளையராஜா தான் என்ற சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். இதனிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. 






கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்‌ஷன்ஸ், மெர்குரி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கவுள்ளார். இவரை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்குகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘இளையராஜா’ என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார். 


இந்த படத்தின் அறிமுக விழா கடந்த மார்ச் 20 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, பாரதி ராஜா, ரங்கராஜ் பாண்டே என பலரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இளையராஜா பற்றிய பல பெருமைகளை நினைவுக் கூர்ந்தனர். நடிகர் தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஒரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது. 


அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் 


இதனிடையே ராக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் அருண் மாதேஸ்வரன். தொடர்ந்து சாணி காயிதம், தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என 3 படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இந்த 3 படங்களிலும் பயங்கரமான வன்முறை காட்சிகள் இருக்கும். இதுதான் அருண் மாதேஸ்வரனின் ஸ்டைல் என நினைத்த நேரத்தில், அவர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப் போவதாக வெளியான அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எப்படி இந்த படத்தை இயக்குவார்? என தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்தது. 


இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் வெற்றி மாறனிடம், “நீங்கள் மிகப்பெரிய இளையராஜா ரசிகர். அவரின் பயோபிக் படம் உருவாகிறது. ஒருவேளை நான் இந்த படத்தை இயக்கினால் குறிப்பிட்ட இந்த காட்சியை ஹைலைட் ஆக வைப்பேன் என எதை சொல்வீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. ஏற்கனவே அருண் மாதேஸ்வரனுக்கு கடந்த 2 நாட்களாக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் திறமையானவர்கள் தான். ஒரு ரசிகனாக அப்படத்தில் நானும் பணியாற்ற தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளேன்” என்று இயக்குநர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.