நம்ம ஊரின் கலாச்சாரம் வெளிநாட்டு மக்களுக்கு தெரியாது. அவர்களை பொறுத்தவரை எல்லாம் ஓவர் ஆக்டிங் தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 


வெற்றி மாறன்:


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ளவர் வெற்றி மாறன். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் பொல்லாதவன் படம் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். மேலும் விடுதலை பாகம் 2, வாடிவாசல், வடசென்னை 2 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இயக்கி வருகிறார். இப்படியான நிலையில் வெற்றிமாறனின் பழைய நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






வெளிநாட்டினரால் புரிந்து கொள்ள முடியாது:


அதில் வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமா பற்றி நினைக்கும் கருத்துகள் பற்றி தெரிவித்துள்ளார். அதாவது, “ஜெர்மனியில் உள்ள பெர்லினில் பருத்திவீரன் படம் பார்த்தவர்கள் என்னிடம் சில விஷயங்களை சொன்னார்கள். திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்ட நிலையில் அதில் இடம்பெற்ற வெளிநாட்டு நடுவர், ஏன் இவர்கள் ஓவராக நடிக்கிறார்கள் என கேட்டுள்ளார். அதற்கு, நான் எங்க ஊர்ல நாங்க அப்படித்தாங்க இருப்போம். சோகம்னாலும் சத்தமா தான் அழுவோம். சந்தோசம் என்றாலும் சத்தமாக தான் கத்துவோம்.


வெளிநாட்டு மக்களால் இதை புரிந்துக்கொள்ளவே முடியாது. அவர்களுக்கு நம் படங்கள் ஓவர் ஆக்டிங் ஆக இருப்பதாக தான் தோன்றும். நம் வாழ்க்கையே அதுதான் என வெளிநாட்டு மக்களுக்கு தெரியாது. நம்ம மக்களுக்கான படத்தை தான் நாம் எடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.


விருதுகளை குவித்த பருத்திவீரன்  


2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தில் கார்த்தி, பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படம் ஓராண்டுக்கும் மேலாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. மேலும் தமிழ்நாடு அரசின் மாநில விருது, நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது என ஏகப்பட்ட படங்களை பருத்திவீரன் குவித்து தமிழ் சினிமாவின் கிளாஸிக் படங்களில் ஒன்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.