கதாநாயக பிம்பங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் காலம் காலமாகக் கொண்டாடி வந்தாலும் இன்றைய நடிகர்களை தலைவர் என்று கூப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.


தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை  நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் இயக்குநர் வெற்றி மாறன் உரையாற்றினார்.


அப்போது “இன்றைய சூழலில் இளைஞர்கள் பலர் நூலகங்களை விட்டு திரையரங்குகளில் கூடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் நமது வளர்ச்சியை எவ்வகையில் பாதிக்கிறது?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.


எம்.ஜி.ஆர் போன்ற நட்சத்திர பிம்பம் இல்லை


இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன், “அன்றைக்கும் இதையே தான் செய்தார்கள். எம்.ஜி.ஆர் அளவுக்கு எந்த ஒரு நட்சத்திரத்துக்கும் அவர் அளவுக்கு ரசிகர் பட்டாளம் இல்லை எனக் கூறுவார்கள். நாம் எப்போதும் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களைக் கொண்டாடுபவர்கள்.


நாம் எப்போதும் அப்படி தான் இருந்திருக்கிறோம். இன்றைக்கும் அப்படி தான் இருக்கிறோம். அது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சில நேரங்களில் மன வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனக்கு நீண்ட நாள்களாக இது மனதில் இருந்து கொண்டிருக்கிறது. எங்கே இதை சொல்லலாம் என யோசித்து வந்தேன். அதை இங்கே சொல்லலாம் என நினைக்கிறேன்.


நடிகர்கள் தலைவர்கள் அல்ல


நடிகர்களை தலைவர் என்று சொல்வது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நடிகர்கள் என்பவர்கள் நடிகர்கள், நட்சத்திரங்கள் என்பதெல்லாம் ஓகே. ஆனால் அவர்களை தலைவர்கள் என்று சொல்வது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அதை செய்யாமல் இருக்கலாம் என நினைக்கிறேன். அது தான் இன்றைக்கு எனக்கு அதிகமா  தெரிகிறது. முன்பிருந்தவர்கள் அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள்.


அவர்களை அப்படிக் கூப்பிடுவது ஓகேவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கும் நடிகர்களை அப்படி கூப்பிடுவது கொஞ்சம் நெருடலாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.


இதேபோல் முன்னதாக துணிவு பட ப்ரொமோஷன் பணிகளின் போது சினிமாவுக்கு இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை என அப்பட இயக்குநர் ஹெச்.வினோத் பேசியது கவனமீர்த்தது.


ஹெச்.வினோத் கருத்து


முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், ”பெரிய நடிகர்கள் அனைவரின் பேருக்கும் அவர்களின் ரசிகர்கள் கொடுக்கிற நேரமும் அர்ப்பணிப்பும் தான் ப்ரொமோஷன். 


நூறு கோடி செலவு செய்தாலும் அந்த ப்ரொமோஷன் யாராலும் செய்ய முடியாது. அவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள். இதனால் பில்ட் அப் உருவாகிறது. நான் உனக்காக எவ்வளவு பண்ணியிருக்கேன் என்கிற நிலைமைக்கு அது வந்துவிடுகிறது. ஆனால், ஒரு ஹீரோவாலும், ப்ரொடக்‌ஷன் டீமாலும் உங்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்? நீங்கள் அவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்!


’ரசிகர்கள் இவ்வளவு நேரம் செலவிடத் தேவையில்லை’


ராமதாஸ், அண்ணன் திருமா இவர்களெல்லாம், சினிமாவில் மக்கள் அதிகம் புழங்குவதாக கோபப்படுகிறார்கள் அல்லவா..? அது தான் உண்மை.


சினிமாவுக்கு இவ்வளவு நேரத்தை செலவிடத் தேவையில்லை. பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது என்றால், 3 நாளைக்கு முன் படத்துக்கான ரிசர்வேஷன் ஓப்பன் ஆகும். எந்தப் படத்தின் ட்ரெய்லர், போஸ்டர் உங்களுக்குப் பிடித்துள்ளதோ அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் நாலு பேருக்கு சொல்லலாம். இன்னொரு படம் நன்றாக இருந்தால், உங்களிடம் பணம் இருந்தால் அதையும் போய் பார்க்கலாம். இவ்வளவு தான் அந்த சினிமாவுக்கு நீங்கள் செலவு பண்ண வேண்டிய நேரம். உங்கள் நேரத்தை உங்களைத் தவிர யாராலும் சிறப்பாக செலவிட முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.