விஜய்க்கும் தனக்குமான தொடக்க கால சந்திப்பு குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ள தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் அடுத்ததாக சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை, சூர்யாவை வைத்து வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து வடசென்னை படம் எடுக்கும் வேலையில் ஈடுபடவுள்ள அவர் விஜய்யை வைத்து படம் எடுக்கப் போவதாக நீண்ட நாட்களாகவே தகவல் ஒன்று உலா வருகிறது. இதனை பல இடங்களில் வெற்றிமாறனே தெரிவித்தும் உள்ளார். 


அதேசமயம் கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் தனது 67வது படத்தில் இணையவுள்ளார். அவர் எப்போது வெற்றிமாறன் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இதனிடையே வெற்றி மாறன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். 






அதில் விஜய்க்கும், தனக்குமான அறிமுகம் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், 1999 அல்லது 2000 இருக்கும் என நினைக்கிறேன். அவருக்காக என அந்த கதை இல்லை. ஆனால் அந்த கதையில் விஜய் நடித்திருந்தால் நல்லாருக்கும் என நினைத்தேன். அந்த கதை நண்பன் படத்தின் கதையை ஒட்டியிருக்கும். அந்த கதை எரிச் செகலின் கிளாசிக் என்னும் நாவல் தான். இந்த கதையை நான் அடிதடி படத்தின் இயக்குநர் சிவராஜிடம் சொன்னேன். அவர் அப்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடன் உதவி இயக்குநராக இருந்தார். சிவராஜ் தான் அந்த படத்தை இயக்க விரும்புவதாக சொல்ல நானும் ஓகே சொன்னேன். 


உடனே நாங்கள் எஸ்.ஏ.சி.யிடம் அப்பாயின்மென்ட் வாங்கி கதை சொல்ல போறோம். ஆனால் எனக்கு அன்னிக்கு கதை சொல்ல தெரியல. அப்பவே விஜய்க்கு பூவே உனக்காக, லவ் டுடே வெளியாகி பெரிய ஹீரோவாக உருவாகியிருந்தார். இன்னைக்கு விஜய்ன்னா ஒரு மேஜிக் இருக்கு. அதற்கான தொடக்கமே அதுதான் என வெற்றிமாறன் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.