தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் சினிமாவில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சிக் களத்தை உருவாக்க இருப்பதாக தெரிவித்தார்.


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், " இப்போது இருக்கும் சினிமா பயிற்சி நிறுவனங்கள் மிக அதிகமாக கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதனால் சினிமா சிலர் கைகளுக்கு மட்டுமே போகும் கலையாக சுருங்கி விடுகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சிக் களத்தை விரைவில் உருவாக்க இருக்கிறோம். 100% கல்வி உதவித் தொகையில் பயிற்சி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.


முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் சமூக-பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் உதவித் தொகை பெறத் தகுதியுடைவர்கள் என்றும் தெரிவித்தார். 




 


பொல்லாதவன்,  ஆடுகளம்,  விசாரணை, வட சென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் வெற்றிமாறன். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி  இயக்குனராக பணியாற்றினார். 


2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.