மீண்டும் தனுஷூடன் இணைந்து பணியாற்றுவது எப்போது என்பது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் படமானது ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற்றது.கணுக்கால் காயம் காரணமாக இந்நிகழ்ச்சிக்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்திருந்தார்.
பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் மிர்ச்சி சிவா இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது ஏற்கனவே தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை,அசுரன் ஆகிய படங்களை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.
இதில் வடசென்னை படம் முதல் பாகம் மட்டுமே வெளியானது. 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வெற்றிமாறனோ வாடிவாசல், விடுதலை ஆகிய படங்களில் பிசியாகி விட்டார். இந்நிலையில் இந்த 2 படங்களும் முடிந்த பின் தனுஷ் நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த படம் வடசென்னை 2 ஆம் பாகமா அல்லது வேறு படமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால் வடசென்னை 2 ஆம் பாகத்தை எடுக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்