விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் கடந்த 11ம் தேதி ஒரே நாளில் வெளியானது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால், ரசிகர்கள் திரையரங்க வளாகங்களில் குவிந்தனர். இதனால், திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டன. வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.


வாரிசு..? துணிவு..?


ஆனாலும் தங்களது நாயகன் நடித்த திரைப்படம் தான், பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது என விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர். இதற்கு மத்தியில் பொங்கல் வின்னர் வாரிசு தான் என தமிழ்நாட்டில் அப்படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும், ரியல் வின்னர் துணிவு தான் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தன. இது, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையேயான மோதலை மேலும் அதிகரிக்கச் செய்தது.






வெங்கட் பிரபு ”நச்” பதில்


சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், உண்மையாகவே பொங்கல் வெற்றியாளர் என்பது தியேட்டர் உரிமையாளர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.


வாரிசு கலெக்‌ஷன்:


தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்த, குடும்பக் கதையை மையமாக கொண்ட இப்படத்தில்,  ராஷ்மிகா மந்தனா,  பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, சம்யுக்தா என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. வெளியான அன்று உலகம் முழுவதும் 26.7 கோடி ரூபாய் வசூலித்தது வாரிசு. ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் 11.55 கோடி, 9.9 கோடி என சற்றே சரிந்தது. ஆனால், பொங்கல் விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் எதிர் வரும் நாட்களில் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய நாளில் மொத்தம் 17 கோடி வரை வசூல் செய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


துணிவு கலெக்‌ஷன்:


கிரெடிட் கார்டு, வங்கி மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பான மோசடிகளை வெளிக்கொணரும் வகையில் எடுக்கப்பட்ட துணிவு திரைப்படம்,  மங்காத்தாவுக்கு பிறகு அஜித்தின் க்ரே கதாபாத்திரமாக அவரது ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்துள்ளது. முதல் நாள் உலகம் முழுவதும் 28.6 கோடி ரூபாய் வசூலித்த துணிவு படம் அடுத்தடுத்த நாள்களில் 13.8 கோடி, 9.75 கோடி எனக் குறைந்தது. வெளிநாடுகளில் மட்டும் 14 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், முதல் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் மொத்தம் 66.15 கோடி ரூபாய் துணிவு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.