நான் கமர்ஷியல் படங்கள் பண்ண மாட்டேன் என பிடிவாதம் செய்யவில்லை என இயக்குநர் வசந்தபாலன் (VasanthaBalan) நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் வசந்தபாலன். இவர் 2003ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வெயில் என்ற படத்தை 2006ஆம் ஆண்டு இயக்கினார். இந்தப் படத்தை ஷங்கர் தயாரித்த நிலையில் இப்படம் அந்த ஆண்டுக்கான சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருதை வென்றது. வசந்தபாலன் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறினார். 


தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து ‘அங்காடித் தெரு’ என்ற படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர வைத்தார். தொழிலாளிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி சொல்லப்பட்ட இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் அரவான், காவியத்தலைவன், ஜெயில், அநீதி போன்ற படங்களை வசந்தபாலன் இயக்கினாலும் அப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 


இதனிடையே அடுத்ததாக ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் சீரிஸை வசந்தபாலன் இயக்கியுள்ளார். இது கடந்த மே 17ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளது. இதனிடையே ஒரு நேர்காணலில் பங்கேற்ற வசந்தபாலனிடம், “நீங்கள் சமூகம் சார்ந்த கதைகளை எடுக்கும் இடத்தில் இருந்து வெளியே வந்து முழு கமர்ஷியல் இயக்குநராக மாற வாய்ப்புள்ளதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு, “ஆமாம் என் வீட்டில் எல்லாரும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்போறாங்க. 2 பசங்களுக்கு ஃபீஸ் கட்ட வேண்டும். வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். பொருளாதார கட்டாயங்கள் என்னை அழுத்தத்தில் தள்ளிக்கொண்டு தான் இருக்கிறது. நான் 22 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 7 படங்கள் தான் செய்திருக்கிறேன். எனக்கு இது செய்யத்தான் வருகிறது, பிடித்திருக்கிறது. கமர்ஷியல் படம் பண்ண மாட்டேன் என நான் பிடிவாதம் செய்யவில்லை. எனக்குப் பிடித்ததை செய்கிறேன். சூழ்நிலை என்னை கமர்ஷியல் படம் நோக்கித் தள்ளுகிறது. என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.


22 ஆண்டு சினிமா வாழ்க்கையை வாழ்ந்த என்னிடம் “எப்படிடா இவ்வளவு நம்பிக்கையோட இருந்த இந்த இடத்துக்கு வருவதற்கு?” என்ற கேள்வியை நான் கேட்க  விரும்புகிறேன். எனக்கு என்ன வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன். முதல் படம் சரியாகப் போகவில்லை என்றதும் 2வது படமான வெயிலில் தோல்வியுற்றவர்களின் வாழ்க்கையை வைத்து தான் எடுத்தேன். இதெல்லாம் எந்த நம்பிக்கையில் எடுத்தேன் எனத் தெரியவில்லை. நான் என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் தான் செய்வேன். இதில் பல நேரங்கள் தப்பானாலும் என்னை நான் மாற்றிக்கொண்டது இல்லை” என வசந்தபாலன் கூறியுள்ளார்.